அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை:

மிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் லஞ்சம் தலைவிரித்தாடும் அரசு நிறுவனங்களில் முதன்மையானது ஆர்டிஓ  அலுவலகம் என்று கூறப்படுகிறது. இந்த அலுவலங்களில் ஊழல் மற்றும் லஞ்சம் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் 3 மாதத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவர்  தாக்கல் செய்துள்ள மனு வில், ‘‘நான்கு சக்கர இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தற்போது நவீன மின்னணு முறையில் ‘ஹெச் டிராக்’ தேர்வுமுறையை அமல்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முறை குறித்து எங்களுக்கு போதுமான பயிற்சியோ அல்லது செயல்முறை விளக்கமோ அளிக்கப்படவில்லை.

இதனால் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இதுதொடர்பாக விதிகளில் திருத்தம் கொண்டு வரும்வரை பழைய முறையே தொடர அனுமதிக்க வேண்டும். மின்னணு ‘ஹெச் டிராக்’ முறையை நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதைத்தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி,  போக்குவரத்து விதிகளை மதித்து வாகனத்தை எப்படி சிறப்பாக ஓட்டுவது என்பதை கற்றுத்தருவது மட்டுமே ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் வேலை. தற்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு முறையை தமிழக அரசு நவீனப்படுத்தியுள்ளது. இதில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் தலையிட முடியாது. நவீன மாற்றத்தை ஏற்க வேண்டும்.

வாகன ஓட்டிகளின் திறமையை முழுமையாக பரிசோதிக்காமல் அவர்களுக்கு உரிமம் வழங்குவதால்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) ஊழல் மலிந்து கிடக்கிறது. பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வருவது அவசியமாகிறது. ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளும் ஒன்றாக இணைந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அன்றாட அலுவலகப் பணிகளில் பயிற்சிப் பள்ளிகளின் தலையீடுதான் அதிக அளவில் உள்ளது.

இந்த விவகாரங்களில்  தமிழக லஞ்சஒழிப்புத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே லஞ்சஒழிப்புத் துறை இயக்குநர் அடிக்கடி ஆய்வுகளை அனைத்து மட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும். ஊழல் சமூகத்தைப் பிடித்த பிணி மட்டுமல்ல. நாட்டின் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக இருந்து வருகிறது.

எனவே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமத்துக்காக அரசு செயல்படுத்தவுள்ள மின்னணு ‘ஹெச் டிராக்’ தேர்வு முறையை விரைவாக அமல்படுத்த வேண்டும்.  அனைத்து ஆர்டிஓ அலுவலகங்க ளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை 3 மாதத்தில் பொருத்த வேண்டும். இந்தக் கேமராக்கள் ஒரு வாரத்துக்கு மேல் செயல்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் அலுவலகங்களுக்குள் தரகர்களையோ அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஊழியர்களையோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதற்காக திடீர் சோதனை நடத்தும் வகையில் சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அலுவலர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டக்கூடாது. ஆர்டிஓ-க்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும், பணியில் சேர்ந்தபோது அவர்களுக்கு இருந்த சொத்து விவரங்களையும் ஒப்பிட்டு முறைகேடுகள் இருந்தால் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.