வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 7 நாடுகளின் பயணிகள் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார். உலகளவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் பணியாளர் விசா வழங்குவதற்கும், குடியேற்ற உரிமை பெறுவதற்கும் பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளார்.

இதனால் அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டினர் வெளியேறும் சூழல் உருவாகிவிட்டது. இந்த வரிசையில் டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அந்நாட்டிற்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிகையில் சரிவு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது என்று அமெரிக்க கல்லூரி பதிவாளர்கள் மற்றும் மாணவர் சேர்க்கை அதிகாரிகள் சங்க ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிபர் டிரம்பின் குடியேற்றம் மற்றும் பயண தடை தொடர்பான அதிரடி உத்தரவுகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு கல்வியாளர்கள், மாணவளை தேர்வு செய்வோர், கல்வி நிறுவன அதிகாரிகள் கருந்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘‘கல்விக்காக அமெரிக்காவில் அடி எடுத்து வைத்தவுடன், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை’’ என்று வெளிநாட்டு மாணவர்கள் பரிமாற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கெய்ரோவை சேர்ந்த மாணவர் மொமன் ரிகான் சில மாதங்கள் மாணவர் பரிமாற்ற முறையில் அமெரிக்காவில் தங்கியிருந்தார். தற்போது அமெரிக்காவுக்கு சென்று திரும்பும் பயணிகள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் அவர் தற்போது மீண்டும் அமெரிக்கா வர விரும்பவில்லை என்று சமூக வளைதளத்தில் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவுக்குள் செல்ல முயன்ற பலர் விமான நிலையங்களில் பல சிரமங்களை சந்தித்துள்ளனர். அவர்கள் அரபு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்’’ என்று ரிகான் தெரிவித்துள்ளார். ‘‘அமெரிக்காவில் வாழும் மற்றும் பணியாற்றும் வெளிநாட்டினர் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை பார்க்கும் போது தெற்கு கலிபோர்னியா மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு வருவதா வேண்டாமா என்று முடிவு எடுக்காமல் இருக்கிறேன்’’ என்று தைவான் மாணவி விக்கி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் பொறியாளர் உள்பட 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாட்டை விட்டு வெளியேறு என்று கொலைகாரன் கோஷமிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. “பாதுகாப்பு காரணமாக எந்த பல்கலைக்கழகத்திற்கு செல்வது, அல்லது அனைத்துக்கும் செல்வதாக என்ற நிலையில் இருக்கிறேன்’’ என்று விக்கி சங் தெரிவித்துள்ளார்.

இவரது தோழியான சீனாவை சேர்ந்த யி ஜிகிஹூய் என்பவரும் டிரம்பின் புதிய கட்டுப்பாடுகளை கண்டு அச்சமடைந்துள்ளார். ‘‘சீனாவுடன் வர்த்தகம் அல்லது அரசியல் தொடர்பாக கருந்த வேறுபாடு ஏற்பட்டால் விசா நடைமுறைகளை டிரம்ப் மேலும் கடுமையாக்கிவிடுவாரோ என்ற அச்சம் உள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘கல்விக்காக நாங்கள் முதலீடு செய்கிறோம். எதிர்பாராதவிதமாக விசா ரத்து செய்யப்பட்டால் நாங்கள் நாட்டிற்குள் நுழைய முடியாது. அப்போது முதலீடு கேள்விகுறியாகிவிடும்’’ என்றார். சர்வதேச அளவில் போட்டி மிகுந்த அமெரிக்க உயர்கல்வியை பெற பலவற்றை பணயம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பன்முகதன்மையை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

‘‘2016ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக இருந்தது. இதன் மூலம் 32 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்தது. 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது’’ என்று சர்வதேச பயிற்றுவிப்போர் சங்கம் தெரிவித்துள்ளது. ‘‘வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைவதால் விரிவுரையாளர்கள் பணியிழப்பு ஏற்படும். உயர் பயிற்சி மற்றும் திட்ட இழப்புகள் ஏற்படும்’’ என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மாணவர்களையும், பெற்றோரையும் சமாதானம் செய்வது மிகவும் கடினம். இதனால் அமெரிக்க உயர்கல்வி சிக்கலை சந்திக்க நேரிடும். பெய்ஜிங்கை சேர்ந்த ஜூவோவுலின்லி கூறுகையில் ‘‘டிரம்ப் நிர்வாகத்தால் ஏற்படும் கொள்கை மாற்றங்களில் இருந்து எனது பல்கலைக்கழகம் எனக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. அதோடு, பெரிய அளவில் விபரீதம் நடக்கும் அளவுக்கு அமெரிக்க மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.