தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை – கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்!

சென்னை: கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்று அதிகளவிலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘லோக்கல்சர்க்கிள்’ என்ற ஒரு சமூகம் சார்ந்த சமூக வலைதளம் மேற்கொண்ட ஆய்வில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர் 57% பங்கேற்பாளர்கள். மொத்தம் 40000 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 46% மக்கள், அரசு மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அஞ்சுவதாக தெரிவித்தனர். ஏனெனில், அரசு மருத்துவமனைகளில் குவியும் அதிகளவு கூட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமை உள்ளிட்ட காரணிகளை அவர்கள் முன்வைத்தனர்.

மேலும், 32% மக்கள், கொரோனாவை கையாளும் அளவிற்கு போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு நாட்டில் இல்லை என்றனர். அதேசமயம், 16% மக்கள், சிகிச்சை மற்றும் பரிசோதனை தொடர்பான அதிககாலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்ற குறையை தெரிவித்தனர்.

மேலும், நோய் தொற்று ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கே செல்ல விரும்புவதாக 32% பேரும், அரசு மருத்துவமனைக்கு செல்ல விரும்புவதாக 22% பேரும், மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை என்று 32% பேரும் கருத்து தெரிவித்தனர்.