புதுடெல்லி:

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைந்துவிட்டதாக சி-வோட்டர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு தரப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்டது.


சி-வோட்டர்ஸ் அமைப்பின் அரசியல் கள நிலவர ஆய்வு குறித்த செய்தியை ஏபிபி நியூஸ் ஒளிபரப்பி வருகிறது.

அந்த ஆய்வின் விவரம் வருமாறு:

‘தேசத்தின் மன ஓட்டம்’  என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. 2017- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது பாஜகவுக்கு பாதகமாகவே உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு 20 மாதங்களாகியும், ஆளும் அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் இன்னும் மக்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான அபாய மணி 2017-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே ஒலித்துவிட்டது. அப்போதிலிருந்தே பாஜக ஆட்சி மற்றும் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது.

பாஜகவுக்கு ஒரே ஆறுதல் முன்பை விட தற்போது கட்சி பிரபலமடைந்துள்ளதுதான். அநேகமாக எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது.

2017-க்குப் பிறகு குஜராத்தில் நூலிழையில் வென்றது, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் தோல்வி ஆகியவை மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் காரணிகளாக உள்ளன.

மேற்கொள்ளப்பட்ட 2 ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, பிரியங்கா காந்திக்கு காங்கிரஸில் பொறுப்பு தருவதற்கு முன்பு இருந்த நிலவரம். மோடிக்கு சாதகமானதாக இல்லை. மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் முதன்முறையாக 50 சதவீதமாக குறைந்துள்ளன.
இவ்வாறு சி-வோட்டர்ஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.