பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது என்று தெரிவித்துள்ளார் .

பெண்ணின் உடலை வைத்து இந்த சமூகம் ஆடும் கேவலமான விளையாட்டு தான் இந்த பொள்ளாச்சி வீடியோ. பாதிக்கப்பட்ட பெண் வசதியானவராக இருந்தால் அவரிடம் இருந்து பணம் பறிப்பதும், அவர்களிடம் இருந்து காரியம் சாதித்துக் கொள்ளவும் தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்தக் குற்றத்தில் உள்ளவர்களை தொழில்முறை குற்றவாளிகளாக பார்க்க வேண்டும்.

எனது உடலை வைத்து நீ என்னை பணியச் செய்ய முடியாது என்று பெண்கள் துணிந்து இருப்பது அனைவரின் கடமை. பெண்களுக்கு எதிராக இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்கொடுமை தான் பாலியல் வன்கொடுமையை விட மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்

என்னுடைய மகன், மகளை ஒரே விதமாகத்தான் நான் வளர்க்கிறேனா என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. மற்றவர்கள் பார்வைக்கு உன்னை எப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்பது பற்றி சமூகம் எனக்கு கற்று கொடுத்தவற்றை நான் எனது பிள்ளைக்கு அறிவுரையாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.