பாட்னா

பீகார் மாநில காவல்துறைத் தலைவரும் சுஷாந்த் சிங் வழக்கு விசாரணை அதிகாரியுமான குப்தேஸ்வர் பாண்டே பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பீகார் மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) குப்தேஸ்வர் பாண்டே விசாரணை அதிகாரியாகப் பொறுப்பில் இருந்துள்ளார்.  அவர் இந்த விவகாரத்தில் மும்பை காவல்துறையினர் தங்களுக்குச் சரியான ஒத்துழைப்பை தரவில்லை எனக் குற்றம் சாட்டினார்.  மேலும் நடிகை ரியா சக்ரவர்த்திக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிக்க  தகுதி இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ள இந்த வேளையில் குப்தேஸ்வர் பாண்டே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.  அவருடைய விருப்ப ஓய்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.   ஊர்காவல் படைத்தலைவர் எஸ் கே சிங்கலுக்குப் பீகார் காவல்துறைத் தலைவர் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள புக்சார் தொகுதியில் இருந்து குப்தேஸ்வர் பாண்டே போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்க பாஜக முன் வந்துள்ளது.   பாண்டே ஏற்கனவே கடந்த 2014 மக்களவை தேர்தலில் புக்சார் மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்ப ஓய்வு கோரினார்.  அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தனது விருப்ப ஓய்வு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.