நீ அனுபவித்த அனைத்து வலிகளுக்காகவும் என்னை மன்னித்துவிடு ; சுஷாந்த் சகோதரியின் உருக்கமான பதிவு….!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சிங், சுஷாந்த் மறைவு குறித்து நீண்ட பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

”என் குழந்தை தற்போது உடலளவில் நம்மோடு இல்லை. நீ அதிக வலியில் இருந்தாய் என்பதை நான் அறிவேன். நீ ஒரு போராளியாக அந்த வலியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாய். என்னை மன்னித்துவிடு தங்கமே… நீ அனுபவித்த அனைத்து வலிகளுக்காகவும் என்னை மன்னித்துவிடு. என்னால் முடிந்திருந்தால் உன்னுடைய வலிகளை நான் எடுத்துக்கொண்டு என் மகிழ்ச்சியை உனக்கு அளித்திருப்பேன்.

உன்னுடைய மின்னும் கண்கள் இந்த உலகத்துக்கு எப்படி கனவு காண வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தது. உன்னுடைய கபடமற்ற சிரிப்பு உன் இதயத்தின் தூய்மையைப் பறைசாற்றியது.

அன்பானவர்கள் அனைவருக்கும், இது ஒரு சோதனைக் காலம். ஆனால் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், வெறுப்பை விட அன்பையே தேர்வு செய்யுங்கள். கோபத்தை விட கனிவைத் தேர்வு செய்யுங்கள். உங்களையும் மன்னித்து மற்றவர்களையும் மன்னியுங்கள். அனைவரும் அவரவர் பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். உங்களிடமும் கனிவாக நடந்துகொண்டு மற்றவர்களிடமும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் இதயத்தை எக்காரணத்தை கொண்டும் மூடிவிடாதீர்கள்”.

இவ்வாறு ஸ்வேதா சிங் கூறியுள்ளார்.