ஆயுள்தண்டனை முடிந்தது: நாட்டை அதிரவைத்த கொலைக் குற்றவாளி விடுவிப்பு

னைவியைக் கொன்று, ‘தந்துாரி’ அடுப்பில் எரித்த வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்த சுசில் சர்மாவை, உடனடி யாக விடுதலை செய்யும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1995ம் ஆண்டு நாட்டையே அதிரவைத்தது நைனா சகானி கொலை வழக்கு.

தொழிலதிபரான சுசில்குமார்,  டில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார். இவரது மனைவி நைனா சகானி.

தன் மனைவி, நைனா சகானிக்கு, தன் நண்பர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சுசில்குமார் சந்தேகப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கடந்த 1995ம் ஆண்டு  ஜூலை, 2ம் தேதி,  நைனா சஹானியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பிறகு மனைவியின் உடலை  சிறு சிறு துண்டுகளாக வெட்டினார். பிறகு, உடல் பாகங்களை டில்லியில் உள்ள ஒரு உணவு விடுதியின் தந்துாரி அடுப்பில் போட்டு, எரித்து சாம்பலாக்க முயன்றார். ஆனால் அதற்குள் காவல்துறையிடம் பிடிபட்டார்.

அவருடன், உணவு விடுதி மேலாளர் கேசவ் குமார் உட்பட ஐந்து பேர், கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், சுஷில் சர்மாவுக்கு, டில்லி செஷன்ஸ் நீதிமன்றம், 2003ம் ஆண்டு நவம்பர்  3ம் தேதி, துாக்கு தண்டனை விதித்தது. இதை, 2007ல், டில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

மேல்முறையீட்டில் உச்சீதிமன்றம் சுசில் குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தது. இத்தீர்ப்பு  , 2013ல் அளிக்கப்பட்டது.

சுசில் சர்மா கடந்த 29 ஆண்டுகளாக, சிறை வாசம் அனுபவித்து வந்தார். அவர், தனது தண்டனைக் காலம் முடிந்தும், சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று, டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக, சுஷில் சர்மாவை விடுதலை செய்யும்படி, உத்தரவு பிறப்பித்தது.