இந்தியா – சீனா : ஒருவர் மற்றவர் மொழிகளை கற்க வேண்டும் : சுஷ்மா ஸ்வராஜ்

பீஜிங்

ந்தியர்களும் சீனர்களும் ஒருவர் மொழியை மற்றவர் கற்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறி உள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனாவுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.   இந்த பயணத்தின் போது அவர் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு நிகழ்த்தி உள்ளார்.   பிரதமர் மோடி சீனா செல்வதற்கு முன்னோடியாக சுஷ்மா  சென்றுள்ளதாகவும் பிரதமரின் சீனப் பயணம் குறித்த ஏற்பாடுகளை அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவர் நேற்று சீனா – இந்தியா நட்புறவில் இந்தியின் பங்கு என்னும் தலைப்பில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர், “இந்தித் திரைப்படங்களான டங்கல், சீக்ரட் சூப்பர் ஸ்டார், இந்தி மீடியம் போன்ற படங்கள் சீன மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.    இந்தப் படங்களை சப் டைட்டில் மூலம் பார்ப்பதை விட இந்தி மொழியைக் கற்றுக் கொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது.

இரு நண்பர்கள் சேர்ந்து பேசும் போது அவரவர் மொழியில் பேசுவதே சாலச் சிறந்தது.   தனது மொழியை பேசும் மாற்று நாட்டவரிடம் எல்லோருக்கும்மே ஒரு அன்பு பிறக்கும்.   நான் பேசும் இந்தியை நீங்கள் புரிந்துக் கொள்வதும், நிங்கள் பேசும் சீன மொழியை நான் புரிந்துக் கொள்வதும் அவசியம் ஆகும்.   அதனால் இந்தியர்களும் சீனர்களும் ஒருவர் மொழியை மற்றவர் கற்க வேண்டும்”  எனக் கூறி உள்ளார்.

ஆனால் தற்போது சீனாவில் இந்திய மொழிகள் கற்பிப்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.    சீனர்கள் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், வங்கம் ஆகிய மொழிகளை விரும்பி கற்று வருகின்றனர்.    சினாவில் உள்ள 16 பல்கலைக் கழகங்களில் இந்திய மொழிகளைக் கற்கும் மாணவர்கள் உள்ளனர்.   சராசரியாக ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் 400 மாணவர்கள் இந்திய மொழிகளைக் கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.