டாக்கா

ராகினே மாகாணத்தை முன்னேற்றினால் தான் அகதிகள் திரும்ப முடியும் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மியான்மரின் ராகினே மாவட்டத்தில் ராணுவத்தினரும் புத்த மதத்தினரும் நடத்திய வன்முறையால் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் உயிர் தப்பி வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.   சுமார் 6 லட்சம் அகதிகளால் வங்க தேசம் திணறி வருகிறது.   பல தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் அரசுக்கு உதவியாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வங்கதேசத்தில் தனது இருநாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.  அவர் வங்க தேச வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது அலியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.   அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம், “வங்க தேசத்துக்கு இடம் பெயர்ந்துள்ள மக்கல் திரும்பவும் தங்களுடைய இடங்களுக்கு திரும்ப வேண்டும்.  அப்படி சென்றால்தான் இயல்புநிலை ஏற்படும்.” என்றார்.  இந்த சந்திப்பில் அவர் ரோஹிங்கியா அகதிகள் என ஒரு தடவை கூட குறிப்பிடவில்லை.

மேலும், “மியான்மர் அரசு ராகினே மாவட்டத்தை சமுதாய ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் முன்னேற திட்டங்கள் தீட்டியாக வேண்டும்.  அதனால் தான் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.   அதுவே நீண்டகால தீர்வுக்கு ஒரே வழி” எனவும் தெரிவித்துள்ளார்

வங்க தேச அமைச்சர் முகமது அலி, “ரோஹிங்கியா அகதிகளுக்கு தேவையான உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் செய்வதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.” எனக் கூறி உள்ளார்.