சென்னை

றைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை தி நகர் நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளார்.

டில்லியின் இரு பெண் முதல்வர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன் தினம் இரவு மாரடைப்பால் காலமானார்.  நேற்று அவர் உடல் எரியூட்டப்பட்டது.  சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.   அவர் சாதாரண மக்களுடன் கலந்துரையாடுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர் ஆவார்.  சென்னையில் அவர் ஒரு முறை நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளார்.

கடந்த 2004 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் ஒரு  போராட்டத்தில் கலந்துக் கொள்ள சுஷ்மா சென்னை வந்திருந்தார்.  அப்போதைய பாஜக துணைத் தலைவரான லலிதா சுபாஷிடம் அவர் தனது மகளுக்கு ஒரு காலணி வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.  லலிதா அவரிடம் திநகர் பாண்டி பஜார் நடைபாதைக் கடைகளைக் குறித்து விவரித்ததில் அவர் அங்கு சென்று பொருட்கள் வாஙக் விரும்பி உள்ளார்.

தி நகர் பாண்டி பஜாரில் நடைபாதைக் கடைகளில் உணவில் இருந்து உடைகள் வரை விற்பதைக் கண்டு மகிழ்ந்த அவர் லலிதா சுபாஷ் மற்றும் அவர்கள் குழந்தைகளுடன்  பாண்டி பஜாரில் ஒவ்வொரு நடைபாதைக் கடைகளுக்கும் சென்றுள்ளார்.   அவர் கடற்கரையில் நடக்க ஏதுவான காலணிகளை தனது மகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

அப்போது அவர் லலிதாவிடம் கடைக்காரர் கேட்கும் தொகையைக் கொடுத்து விடுமாறு கூறி உள்ளார்.  லலிதா அந்த செருப்புகளுக்கு பேரம் பேசி ரூ.200 கொடுத்துள்ளார். அதற்கு சுஷ்மா இதே செருப்புகளுக்கு முன்பு ஒரு முறை தாம் ரூ.1200 விலை கொடுத்துள்ளதாக லலிதவிடம் சொல்லி உள்ளார்.  அத்துடன் அங்குள்ள பூக்கார பெண்ணிடம் மல்லிகைப் பூ வாங்கி தலையில் சூடி உள்ளார்.  அது முதல் லலிதா  எப்போது சுஷ்மாவை பார்க்க சென்றாலும் மல்லிகைப்பூவை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா உடன் கட்சி பேதமின்றி அவர் மிகுந்த நட்புடன் பழகி வந்துள்ளார்.   ஒரு முறை திருச்சி சிவாவிடம் பாரதியாரின் கவிதையான அச்சமில்லை அச்சமில்லை என்னும் பாடலை கற்றுக் கொண்டுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதலுக்குப் பிறகு அவர் அவையில் இதே பாடலை இசைத்துள்ளார்.   நேற்று முன் தினம் திருச்சி சிவாவை தனது  இல்லத்துக்கு வரவழைத்து  பேசிக் கொண்டிருந்த சுஷ்மா அன்றிரவு மரணம் அடைந்துள்ளார்.