புதிய பாஸ்போர்ட் ஆப்-ஐ அறிமுகம் செய்தார் சுஷ்மா சுவராஜ்

நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் அங்கிருந்தே பாஸ்போர்ட்டுக்கு  விண்ணப்பம் செய்ய புதிய செயலி ஒன்றை வெளியுறவுத்துறை அமைச்சா் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடு செல்பவர்களுக்கான கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் பெறவேண்டும். இதற்காக  நேரில் சென்று விண்ணப்பிக்கும் நடைமுறைதான் தற்போது இருக்கிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அவலகங்கள் உள்ளதால் மற்ற பகுதி மக்கள் அந்த நகரங்களுக்கு சென்று வர வேண்டிய நிலை தற்போது உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் எந்த பகுதியில் இருந்து இருந்தாலும், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடி பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கும் வசதி  இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ (Passport Seva app) என ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த ஆப்பை பயன்படுத்தி எளிதில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆப்-ஐ வெளியிட்டு பேசிய  சுஷ்மா சுவராஜ், ‘‘நாடுமுழுவதும் மக்களவை தொகுதிக்கு ஒன்று வீதம், பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பலர் பாஸ்போர்ட்டுக்கக விண்ணப்பிக்க உள்ளனர். அவர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

ஆப் மூலம் விண்ணப்பித்தால் அந்த பகுதி காவல்துறையினர் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு தபாலில் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் அலைச்சல் இன்றி வேகமாக ஒருவர் பாஸ்போர்ட் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.