குருத்வாரா விழாவுக்கு செல்ல மறுத்த சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி

பாகிஸ்தானில் நடக்கும் கதர்பூர் குருத்வாரா விழாவுக்கு சுஷ்மா ஸ்வராஜ் செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சீக்கியர்களின் புண்ணிய தலம் கர்தார்பூர். இங்குள்ள குருத்வாராவின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்குள்ளேயும் மற்றொரு பகுதி இந்தியாவிலும் அமைந்துள்ளது. இந்த குருத்வாராவில் ஒரு சீக்கிய சமய வழித்தடம் அமைக்க வேண்டும் என சீக்கிய மக்கள் வெகுநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இரு நாடுகளுக்கு இடையில் இந்த குருத்வாரா அமைந்துள்ளதால் இது குறித்து இரு நாட்டு அரசுடனும் சீக்கிய மக்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

இறுதியாக இரு நாட்டு அரசுகளும் இதற்கு ஒப்புதல் அளித்தன. பாகிஸ்தான் நாட்டுப் பகுதியில் பாகிஸ்தானும் இந்திய நாட்டுப் பகுதியில் இந்தியாவும் வழித்தடம் அமைக்க உள்ளன. அதற்காக வரும் 26 ஆம் தேதி அன்று இந்தியப் பகுதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கலந்துக் கொள்கிறார். அதே போல் 28 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் பகுதியில் பாக் பிரதமர் இம்ரான் கான் அடிக்கல் நட்டுகிறார்.

இந்த விழாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த விழாவில் கலந்துக் கொள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பாக் பிரதமர் இம்ரான் கான் சார்பில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்புக்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதிலில், “கர்தார்பூர் குருத்வாராவில் சமய வழித்தடம்  அமைக்க அடிக்கல் நாட்டு விழாவுக்கு என்னை அழைத்த் பாக் உள்துறை அமைச்சருக்கு எனது நன்றி. விழா சிறக்க வாழ்த்துகிறேன். ஏற்கனவே ஒப்புக் கொண்ட அலுவல் காரணமாக நான் வர இயலவில்லை” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது டிவிட்டரில் “பாகிஸ்தான் அரசு கர்தார்பூர் குருத்வாராவில் சமய வழித்தடத்தை விரைவில் அமைத்து நமது குடிமக்கள் குருத்வாராவில் வழிபாடு நடத்த வகை செய்யும் என நம்புகிறேன்”  என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்க்ள் ஹர்சிம்ராத் கவுர் மற்றும் எச் எஸ் பூரி ஆகியோர் இந்தியா சார்பில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன