டில்லி

சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு பாகிஸ்தானியர்களுக்க்கு மருத்துவ விசா வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமுக உறவு இல்லாத போதிலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் பல பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க உதவியுள்ளார்.

பாகிஸ்தான்  நாட்டின் லாகூரை சேர்ந்த ஹுசைர் ஹுமாயுன் என்பவரது மூன்று வயது மகளுக்கு இதய நோய் சிகிச்சை அளிக்க இந்தியா வர விரும்பினார்.  அவர் தனக்கு விசா வழங்க உதவ வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுத்தார்.  அதை ஏற்றுக்கொண்டு விசா வழங்கி உள்ளதாக சுஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். “இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள அந்த குழந்தை எல்லா நலனும் பெற்று உடல்நிலை தேற இறைவனை பிராத்திக்கிறேன்” என தனது டிவிட்டரில் சுஷ்மா பகிர்ந்துள்ளார்.

மற்றொரு பாகிஸ்தான் பெண்மணியான நூர்மா ஹபிப் தனது தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை நடத்த இந்தியா வர வேண்டும் எனவும் அதற்கு விசா கோரியும் சுஷ்மா ஸ்வராஜுக்கு வேண்டுகோள் விடுத்தார்.   அவருக்கு இந்தியா விசா வழங்கும் என சுஷ்மா அறிவித்துள்ளார்.   அத்துடன் “உங்கள் தந்தையின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து அவர் நீண்ட நாள் வாழவேண்டும்” என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.