அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைபடி உயர்வு அடுத்த ஆண்டு முதல் வழங்க முடிவு!

டெல்லி: கொரோனா காரணமாக நடபாண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 2021ம் ஆண்டு முதல் வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி நடப்பாண்டிலும் (2020) உயர்த்தப்பட்டது. அதன்படி, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.

ஆனால், கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்ததால்,  அரசு ஊழியர்கள் மற்றம் ஒய்வூதிய தாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி உத்தரவிட்டன. அதன் காரணமாக, பழைய அளவிலான, அதாவது  17 சதவீத அகவிலைபடி உயர்வே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2021) முதல் அகவிலைபடியை 17 சதவீதத்தில் இருந்த 21 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் சுமார்  50 லட்சம் அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

மத்தியஅரசின் இந்த முடிவு  அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.