சண்டிகர்:

இரு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதாவின் பாபா ராம் ரஹீம் சிங்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து ஆஸ்ரமத்தில் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் தற்போதைய தேரா தலைவராக உள்ள விபசனா இன்சான் மற்றும் சாமியாரின் வளர்ப்பு மகளான ஹனிப்ரீத்துக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் சாமியாரின் மனைவி எங்கே? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

சாமியாரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் சில சமூக வளைதளங்களில் வெளியாகி வருகிறது. சில படங்களில் சாமியார் தனது மகள்கள், மருமகன்களுடன் இருக்கிறார். வழக்கில் சாமியார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் ஹெலிகாப்டரில் சாமியார் ரோஹ்தக் சிறைக்கு அழைத்து சென்றபோது வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் உடன் சென்றார்.

ஆனால், அவரது மனைவியை வெளியில் எங்கு பார்க்க முடியாதது ஏன்?…அவர் வெளிச்சத்திற்கு வர விரும்பவில்லையா? அல்லது அவர் திட்டமிட்டே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது போன்று விடை இல்லாத பல கேள்விகளுக்கு சாமியாரின் ஆதரவாளர்கள் சிலர், தேராவின் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவி கலந்துகொள்வார் என்று கூறுகின்றனர். சிலர் மனைவி குறித்து கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் பார்த்தது கிடையாது என்றனர்.

சிர்ஸா பகுதியில் உள்ள தேரா ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக அவரது மனைவியை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தது கிடையாது. அவர் தனது செயல்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளார். சமயங்களில் தேரா நிகழ்ச்சிகளில் அவரை கண்டுபிடிப்பதே கடினம்’’ என்றார்.

அவரது மனைவி பெயர் ஹர்ஜித் கவுர். சாமியார் 10ம் வகுப்போடு பள்ளியில் இருந்து வெளியேறிய பிறகு இவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் அமர்ப்ரீத், சரன்ப்ரீத். மகன் ஜஸ்மீத் சிங். வளர்ப்பு மகள் பிரியங்கா தனேஜா என்ற ஹனிப்ரீத். இவர் தான் சாமியாருக்கு நெருக்கம்.

அவரது மனைவி ஆஸ்ரம வளாகத்தில் தான் இருப்பார். அவர் எங்கே தங்கியிருக்கிறார் என்பது தெரியாது. அவர் சாதாரண ஆடை அணிந்து கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருப்பார். இதனால் தான் அவரை சாமியாரின் ஆதரவாளர்கள் கண்டுகொள்வது கிடையாது.

தேராவில் அவர் அமைதியாக சமுதாய பணிகளை கவனித்து கொண்டிருப்பார். தேராவில் அவரது பங்கு என்ன என்பது யாருக்கும் தெரியாது. சாமியாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவர் அமைதியாகவே இருந்துள்ளார்.