7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்! ஓம் பிர்லா

டெல்லி:

க்களவையில் அநாகரிகமாக செயல்பட்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக் தாகூர் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவர்கள்  மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.

கடந்த 2-ம் தேதி முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் நடைபெற்ற அமளியின்போது, மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்து, அவர் முன்பு கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் அதிருப்தியை அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில்  ஒழுங்கீனமாக நடந்ததாக கூறி தமிழகத்தின் விருதுநகர் தொகுதி எம்.பி.யான  மாணிக்கம் தாகூர் மற்றும்  கவுரவ் கோகோய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பெஹனன்,  குர்ஜித் சிங் ஆஜ்லா ஆகிய 7 பேரை விதி 374 இன் கீழ் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்ட்டு வந்தது. இன்றும் இந்த கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கள் பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து,  7 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக 7  எம்.பி.க்களும் நாளை முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும்.