மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம்: பாஜ மீது சரத்பவார் கட்சி குற்றச்சாட்டு

மும்பை:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி காரணமாகவே பாரதிய ஜனதா அதிக வாக்குகளை பெற்று வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.

நேற்று நடைபெற் ற கர்நாடக சட்டசபை வாக்கு எண்ணிக்கையில்,  பாரதிய ஜனதா 104 இடங்கள் பெற்றுள்ளது.காங்கிரஸ் 78 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களும் கைப்பற்றி உள்ளன.  தற்போது தனிப்பெரும் கட்சியாக பாஜ 104 இடங்களை  பெற்றிருந்தாலும்  ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாரதியஜனதாவின் வெற்றி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது புகார் கூறினார். இந்நிலையில், சரத்பவார் கட்சியான தேசியவாத காங்கிரசும் மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடத்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிர மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல்  செய்தியாளர்களிடம் கூறியதவது,

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அதிருப்தி நிலவவில்லை. அங்கு வலுவான நிலையிலேயே காங்கிரஸ் இருந்து வந்துள்ளது.  அதேவேளையில் பாரதிய அறிவித்திருந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு மக்களிடையே செல்வாக்கு கிடையாது. அவர்மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்நிலையில், மாநில தேர்தலில் பாஜ அதிக இடங்களை கைப்பற்றி இருப்பதை நம்பமுடியவில்லை. மக்கள் மனநிலையையும், தேர்தல் முடிவையும் காணும்போது பல முரண்பாடான விஷயங்கள் தெரிகிறது.

தற்போதைய தேர்தல் முடிவை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறைந்த செல்வாக்கே உள்ள பாஜ அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது எப்படி, இது  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்,

மேலும், இந்த சந்தேகத்தை போக்குவதற்கு தேர்தல்களை வாக்கு சீட்டு முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால்தான் தேர்தல் மீதான சந்தேகம் நீங்கும்.  எனவே வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

இவ்வாறு ஜெயந்த் பாட்டீல் கூறினார்.