எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் கண்டனம்!

எஸ்.வி. சேகர்

சென்னை:

எஸ்.வி.சேகர் மீதான முன்ஜாமின்  வழக்கில் காவல் துறை விசாரணை சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை என்றும், சாதாரண மனிதர்கள் மீதான வழக்குகளிலும் இப்படித்தான் விசாரணை நடைபெறகிறதா என சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

வழக்கை விசாரணை செய்த விடுமுறைகால உயர்நீதி மன்ற நீதிபதி  இராமத்திலகம்  காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தும், எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கும்படியும் உத்தரவிட்டார்.

பெண் செய்தியாளர்கள் குறித்து  குறித்து பாஜக பிரமுகரும், நகைச்சுவை நடிகருமான  எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தனது முகநூல் வலை தளத்தில் பதிவிட்டார்.

இதற்கு பத்திரிக்கையாளர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர் மீது காவலர்துறை ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். சொந்த பணி காரணமாக பெங்களூருவில் இருப்பதாகவும், 3 நாட்களில் திரும்பி வந்துவிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எஸ்வி.சேகரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் சார்பில் அழுத்தம் தரப்பட்டது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான கடந்த  விசாரணையின்போது, எஸ்.வி.சேகர் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், அவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை மே 3ந்தேதிக்கு வைத்திருந்தார்.

அதன்படி அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை அளித்த பதில் மனுவில் திருப்தி அடையாத நீதிபதி,

எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் காவல் துறை விசாரணை சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை என்றும், சாதாரண மனிதர்கள் மீதான வழக்குகளிலும் இப்படித்தான் விசாரணை நடைபெறகிறதா? எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இதன் காரணமாக தலைமறைவாக உள்ள  எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்வது உறுதியாகியுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது உச்சநீதி மன்றம் சென்று ஜாமின் பெறலாம்.