எஸ்.வி.சேகர் திருப்பதியில் ‘ஹாயாக’ சுற்றுப்பயணம்: தமிழக காவல்துறை மெத்தனம்

திருப்பதி கோவிலில் எஸ்.வி.சேகர்

சென்னை:

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான அவதூறு வழக்கில், எஸ்வி.சேகரை கைது செய்து விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக காவல்துறை அவரை கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வருகிறது.

தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் எஸ்.வி.சேகர், தற்போது திருப்பதியில் ஜாலியாக சாமி தரிசம் செய்து ஊர் சுற்றி வருகிறார்.

அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம், அவரை கைது செய்து விசாரிக்கலாம் என்றும்,  காவல் துறை விசாரணை சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை என்றும், சாதாரண மனிதர்கள் மீதான வழக்குகளிலும் இப்படித்தான் விசாரணை நடைபெறகிறதா என சென்னை உயர்நீதி மன்றம்  நீதிபதி  இராமத்திலகம்  காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தும், எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கும்படியும் உத்தரவிட்டார்.

எஸ்.வி.சேகர் பாஜக நிர்வாகி என்பதாலும், அவரது உறவினர் தமிழக தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன் என்பதால், எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக காவல்துறையினர் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

எஸ்விசேகர் தலைமறைவாக இருப்பதாக கூறி வரும் காவல்துறையினர், அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எஸ்.வி.சேகர் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஹாயாக திருப்பதியில் வலம் வருகிறார்.

அவர் திருப்பதியில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால், தமிழக காவல்துறையினருக்குத்தான் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.