டெல்லி: வைக்கோலை மாற்றத்தக்கவல்ல, செறிவூட்டப்பட்ட பொருளாக மாற்றினால், டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் யோசனை தெரிவித்திருக்கிறார்.

தீபாவளி கொண்டாட்டங்களின் போது எழும் புகை மூட்டம், அதனால் ஏற்படும் சிக்கல்களை விட இப்போது தலைநகர் டெல்லி, காற்று மாசினால் சிக்குண்டு தடுமாறி வருகிறது.

கட்டுப்படுத்தமுடியாத காற்று மாசினால், பள்ளிகளுக்கு விடுமுறை, விமான போக்குவரத்தில் பாதிப்பு, வேறு இடங்களுக்கு குடிபெயர்தல் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன புகை மட்டுமல்ல, அண்டை மாநிலமான அரியானா, பஞ்சாப் ஆகிய மாநில விவசாயிகள் தான் காற்றின் மாசுபாடுக்கு காரணம் என்று குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. அறுவடைக்கு பிறகு அவர்கள் தீ வைத்த எரித்த வைக்கோல், அதனால் எழுந்த புகையே டெல்லியின் அவல நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி முதலமைச்சரும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.

ஆனால், அவர்கள் மீது குறை சொல்வதை விட்டுவிட்டு, வைக்கோல், வேளாண் குப்பைகளை மாற்றத்தக்க, செறிவூட்டப்பட்ட, பயன்படும் பொருளாக மாற்றினால் இந்த நிலைமையை தவிர்க்கலாம் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது பிரபல வேளாண் விஞ்ஞானி, சூழலியலாளருமான எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன்.

 

தென் இந்தியாவில் வைக்கோலை எந்த விவசாயியும் எரிப்பது இல்லை. மாறாக, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அதே நேரத்தில் அவற்றை செறிவூட்டப்பட்ட பொருளாக மாற்றலாம்.

மியான்மரில் உள்ள நெய்பேயிதா என்ற பகுதியில் உள்ள நெல் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பூங்காவுக்கு வெளியுறவு அமைச்சகம் நிதி உதவி அளித்திருக்கிறது. இந்திய குடியரசு தலைவர் அதனை திறந்து வைத்திருக்கிறார்.

அந்த பூங்காவில், வைக்கோல் செறிவூட்டப்பட்ட பொருளாக மாற்றப்படுகிறது. அதாவது தாள், அட்டைகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் ஆகிய பொருட்களாக உபயோகப்படும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறையை டெல்லி, அரியானா மற்றும் உத்தரப்பிரதேச  அரசுகள் பின்பற்றலாம். நெல் உயிரியல் பூங்கா அமைத்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். மேலும், வேலைவாய்ப்பும் பெரும், வருமானமும் கிட்டும்.

எனவே, விவசாயிகளை குறை சொல்வதை விட்டுவிட்டு, இதுபோன்ற ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இறங்கினால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணலாம்.