“சுவாதி விவகாரத்தில் பிராமணர் சங்க செயல்பாடு தவறு!” : அமெரிக்கை நாராயணன்

சுவாதி கொலை நடந்தவுடனே, “பிராமண பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்” என்று சிலர் கருத்துக்களை பரவவிட்டார்கள். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையிலும், அவர்களது கருத்து மாறவில்லை. இது குறித்து   சமூக ஆர்வலரும், இந்திய தேசிய காங்கிரஸின் செய்தி தொடர்பாளருமான அமெரிக்கை நாராயணனை தொடர்புகொண்டு பேசினோம்.

அமெரிக்கை நாராயணன்
அமெரிக்கை நாராயணன்

அவர், “குற்றம் நடந்த ஒரே வாரத்தில் மிகுந்த முயற்சி செய்து குற்றவாளியைப் பிடித்த காவல்துறையை பாராட்டுகிறேன்.

அதே நேரம் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்கும்போது, அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள்  எப்படி நடக்கக்கூாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் சுவாதி கொலை அமைந்துவிட்டது.

சாதி, மத, கட்சிகள், இந்த விவகாரம் குறித்து கருத்துச் சொல்வதில் தவறில்லை. ஆனால் இதை வைத்து குளிர்காயலாம் என்று நினைத்தது தவறு.

“வேற சாதி பெண்ணா இருந்தா இப்படி கொலை செஞ்சிருப்பாங்களா” என்று பேசுவதும் தவறு. அதற்கு பதில் அளிப்பதாக நினைத்து, “இப்படித்தான் நடக்கணும்” என்று பேசுவதும் தவறு.

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது.

சவாதி கொலையை “பிராமணர்” என்று சாதி வட்டத்துக்குள் அடக்க நினைப்பது தவறு. பிராமணர்சங்கம் அப்படிச் செய்தது தவறு. இதே ரீதியில் கருத்து சொன்னவர்களும் தங்கள் தவறை உணர வேண்டும்.

பிராமணர் சங்க போஸ்டர்
பிராமணர் சங்க போஸ்டர்

நானும் அதே கம்யூனிட்டியைச் சேர்ந்தவன்தான். அதற்காக சுவாதி கொலையை சாதிக்கொலையாக பார்க்க முடியாது. நானும் கடந்த ஒருவாரணாக இந்த விவகாரம் குறித்து கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். செயல்படாத அரசு என்று இந்த அரசைத்தான் குற்றம் சொல்கிறேன். சாதியை இழுக்கவில்லை. இழுக்கக்கூடாது.

எந்த சாதிப்பெண்ணாக இருந்தாலும் அவள் ஒரு உயிர்தானே. அதை துள்ளத்துடிக்க கொல்வது என்பது பாவம்தானே. இதில் எந்த சாதிப்பெண் கொல்லப்பட்டால் என்ன, எந்த .சாதி ஆண் கொன்றால் என்ன.. எந்த ஒருகொலையும் வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டியதே.

சுவாதி கொலை, தனிப்பட்ட விவகாரத்தால் நடந்திருக்கிறது. இதில் சாதியை இழுப்பது தவறு!”

–  டி.வி.எஸ். சோமு

Leave a Reply

Your email address will not be published.