சுவாதி கொலை
சுவாதி கொலை

சுவாதி கொலை வழக்கு இன்னமும் மர்மப்பாதையாகவே நீண்டுகொண்டிருக்கிறது.
இக் கொலை வழக்கில் குற்றவாளியாக ராம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்தாலும், பலருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை.  ராம்குமார் கழுத்து அறுபட்டது, விசாரணைக்கு சுவாதியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுத்தது, குற்றவாளி யாரென எவருக்குமே தெரியாத நிலையில் பிலால் மாலிக் என்ற இஸ்லாமிய இளைஞன்தான் குற்றவாளி என ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட பலர் தகவலை பரப்பியது, சுவாதி ஒரு உளவாளி என்று ராம்குமார் தாயார் சொன்னது..   என்று மர்மங்களால் சூழப்பட்ட வழக்காவே இருந்துவருகிறது சுவாதி கொலை வழக்கு.
இந்த நிலையில் முகநூலில் (பேஸ்புக்) தீவிரமாக இயங்கும் தமிழச்சி என்பவர், ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார்.
“சுவாதியை கொன்றது இந்துத்துவா ஆட்கள்தான். பழியை இஸ்லாமியர் மீது போட்டு, பிரச்சினையை கிளப்புவதே அவர்களது திட்டம். சுவாதியை கொன்றது ராம்குமார் அல்ல.  முத்துக்குமார் என்பவர் உட்பட மூவர் கூலிப்படையே சுவாதியை கொன்றது. இந்த படையை ஏவியவர் பா.ஜ.க. பிரமுகரான “கருப்பு” முருகானந்தம்தான்” என்று தனது முகநூல்பக்கத்தில் எழுதி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் தமிழச்சி என்பவர். ஏற்கெனவே இவர் முகநூல் பிரபலம் என்பதால் இவரது பதிவுகளை பல்லாயிரம் பேர் படிக்கிறார்கள். அதோடு, குறிப்பிட்ட இந்த பதிவு சென்னேசனல் ஆனது என்பதால் அதைவிட பல மடங்கு பேர் படித்ததோடு, பலர் பகிரவும் செய்திருக்கிறார்கள். ஆகவே, இந்த குறிப்பிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் தமிழச்சி மீது, திருவாரூர் எஸ்.பியிடம் புகார் கொடுத்திருக்கிறார் “கருப்பு” முருகானந்தம்.  “சுவாதி கொலையில் எனக்கும், நான் சார்ந்திருக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பிருப்பதாக பொய்யான தகவலை பரப்பி வரும் தமிழச்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதுதான் புகாரின் சாராம்சம்.
“கருப்பு” முருகானந்தத்தை தொடர்புகொண்டேன்.  தொடர்ந்து  முயற்சி செய்த பிறகு   போனை எடுத்தவர் “தற்போது டில்லியில் கூட்டத்தில் இருக்கிறேன். சிறிது நேரம் கழித்து பேசுகிறேன்” என்றார். அதன்படியே சிறிது நேரத்தில் தொடர்புகொண்டார்.
கருப்பு முருகானந்தம்
கருப்பு முருகானந்தம்

இதோ அவர் நமக்கு அளித்த பேட்டி:
நீங்கள்தான் கூலிப்படை மூலம் சுவாதியை கொலை செய்ததாக தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறாரே..  ?
“முழுக்க முழுக்க இது பொய்யான, அவதூறான தகவல். என்னைப் பற்றி தஞ்சை பகுதியில் கேட்டுப்பாருங்கள்.  பா.ஜ.க.வில் நான் தீவிரமாக இயங்கினாலும், கட்சி பேதமின்றி அனைவரிடமும் நட்புடன் பழகுபவன். மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் கட்சி மாச்சரியம் கடந்து, அனைவருடனும் இணைந்து போராடுபவன். சமீபத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்சினைக்கும் அப்படித்தான் போராடினேன்.  ஆகவே  என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சுவாதி வழக்கில் என்னை இணைத்து சிலர் எழுதுகிறார்கள்.!”
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்..
”ஆம். உண்மைதான். ஆனால் இந்த விசயத்தில் நெருப்பில்லாமலே புகைகிறது.. ஏனென்றால் சுவாதி என்கிற அந்த பெண்ணை எனக்கு தெரியவே தெரியாது. அந்த பெண் கொல்லப்பட்ட செய்தியை எல்லோரையும் போல, தொலைக்காட்சி செய்து பார்த்துதான் நானும் அறிந்தேன். எல்லோரையும் போல  நானும் பதறினேன்.. வேதனைப்பட்டேன். பட்டப்பகலில் ஒரு இளம் பெண்ணை இப்படி துடிக்கத்துடிக்கக் கொன்றிருக்கிறார்களே.. என்று கலங்கினேன். பொது மக்களுக்கும் சுவாதி கொலைக்கும் என்னவிதமான தொடர்போ அப்படித்தான் எனக்கும். இதில் வேண்டுமென்றே என் பெயரை இழுக்கிறார்கள்.”
"பேஸ்புக்" தமிழச்சி
“பேஸ்புக்” தமிழச்சி

இது மட்டுமல்ல.. வேறு பல குற்றச்சாட்டுக்களையும் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார் தமிழச்சி..
”ஆமாம்..  நான் தஞ்சாவூரில் பிராத்தல் செய்வதாகவும்,  கஞ்சா கடத்துவதாகவும்,   நாற்பது கொலைகள் செய்திருப்பதாகவும்கூட ஏதேதோ அவதூறாக எழுதியிருக்கிறார்.
நாற்பது கொலை செய்தவர்கள் தஞ்சையில் அல்ல.. தமிழ்நாட்டிலேயே யாரும் கிடையாது. எந்த அர்த்தத்தில அந்த தமிழச்சி இப்படி எல்லாம் எழுதுகிறார் என்றே புரியவில்லை!”
 
உங்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?
என் மீது கொலை வழக்கு ஒன்றுகூட கிடையாது. விநாயகர் ஊர்வலம் நடத்தும்போது,  எதிர்த்தரப்பினர் ஏதாவது பிரச்சினை செய்வார்கள். அப்போது இந்தப்பக்கம் இருக்கிறவனும் ரெண்டு கல்லை எடுத்து எறிவான். என் தலைமையில் ஊர்வலம் நடப்பதால் என் மீதும் வழக்கு பதிந்துவிடுவார்கள். மற்றபடி நாமளா கல்லெடுத்து அடிக்கிறோம்..?
இதற்கிடையே முகநூலில் இயங்கும் திலீபன் மகேந்திரன் என்பவர் மீதும் புகார் கொடுத்திருக்கிறீர்களே…?
“ஆமாம்..  கடந்த வாரம், திருவாரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்,  சுவாதி கொலையுடன் என்னை தொடர்பு படுத்தி  பொய்யாக ஆரம்பத்தில் எழுதியது அந்த திலீபன் மகேந்திரன்தான்.இந்த திலீபன் மகந்திரன்தான் கடந்த குடியரசு தினத்தின் போது தேசிய கொடியை எதிர்தது, அதை முகநூலில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.”
சுவாதி கொலையில் உங்களுக்கு தொடர்பு என்பது உட்பட மற்ற குற்றச்சாட்டுக்களும் அவதூறு என்கிறீர்கள்.  உங்கள் மீதும் உங்கள் கட்சியான பாஜக மீதும் விமர்சனம் வைத்து  இப்படிப்பட்ட செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இது குறித்து உங்கள் கட்சி, ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லையா?
 “ பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள் விரைவில் டி.ஜி.பி.யை சந்தித்து பாகார் கொடுக்க இருக்கிறார்கள்.  சைபர் க்ரைமில் தனது வழக்கறிஞர்கள் மூலமாக இன்று அல்லது நாளை புகார் அளிக்கப்படும்.”
தமிழச்சி மீது திருவாரூர் எஸ்பியிடம் நேற்று புகார் அளித்திருக்கிறீர்கள். தமிழச்சி இருப்பது பிரான்ஸ் நாட்டில். அந்நாட்டு குடியுரிமை பெற்றவர். நடவடிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..
”நிச்சயம் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்!  இங்கு  கொடுக்கும் கம்ப்ளைன்ட் காப்பியை  பிரான்ஸுக்கு அனுப்பி வைத்தால் அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று வழக்கறிஞர்கள் சொல்லிியருக்கிறார்கள். தவிர, மானநட்ட வழக்கும் தமிழச்சி மீது தொடுக்கப்போகிறேன். 
சுவாதி கொலையை இந்துத்துவாவாதிகள்தான் செய்தார்கள் என்றும் அதற்கான ஆதாரத்தை தனது வழக்கறிஞர் மூலமாக கோர்ட்டில் தாக்கல் செய்யத் தயார் என்றும் தமிழச்சி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்..
”அவரிடம் ஆதாரம் இருந்தால் அதை உடனடியாக தாக்கல் செய்யட்டும். அதைத்தான் நானும் விரும்புகிறேன். பொய்யான புரளிகளை கிளப்புவதைவிட்டுவிட்டு அந்த ஆதாரங்களை அளிக்கட்டும்.”
இப்படியான புகார்கள் கிளம்ப காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? 
 “சுவாதி கொலையை இந்துத்துவ அமைப்புகள்தான் திட்டமிட்டு செய்தன என்று பொய்யா நிறுவ முயல்கறார்கள் சிலர். இந்த சதியின் பின்னணியில் சில இஸ்லாமிய, திராவி, தலித் அமைப்புகள் இருக்கின்றன!
பேட்டி:  டி.வி.எஸ். சோமு