சென்னை,

சுவாதி கொலை வழக்கு படத்துக்கு தடை விதிக்க கோரி சுவாதியின் தந்தை சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய  நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஐடி ஊழியர்  சுவாதி கொலை வழக்கு குறித்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற மென்பொறியாளர் கடந்த 2016 ஜூன், 24 காலை, 6:30 மணிக்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம நபரால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில்,ராம்குமார் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுவாதி – ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே இயக்குனர் எஸ்டி.ரமேஷ் செல்வன் என்பவர், சுவாதி கொலை சம்பவத்தை  படமாக எடுத்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர்  நேற்று முன்தினம்  வெளியானது. இதில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சுவாதி படத்திற்கு தடை விதிக்க கோரி சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் சென்னை சாந்தோமில் உள்ள  டிஜிபி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், சுவாதி திரைப்படத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் உள்ளன. இப்படம் வெளியானால் எங்கள் குடும்பத்தார் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவர். ஆகையால் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மேலும் எங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் இப்படத்தை எடுத்துள்ளனர். ஆகையால் இப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்