ரோம்: கடந்த 26 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த போல் வால்ட் அவுட்டோர் சாதனையை முறியடித்துள்ளார் ஸ்வீடனின் போல் வால்ட் வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ்.

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற போட்டியில், இதை செய்துள்ளார் அவர்.

இவர் மொத்தமாக 6 மீட்டர் & 15 சென்டிமீட்டர்கள் உயரம்  தாண்டியுள்ளார். இதற்கு முன்னர், கடந்த1994ம் ஆண்டு செர்கி பப்கா என்ற போல் வால்ட் வீரர் 6 மீட்டர் & 14 சென்டிமீட்டர்கள் தாண்டியதே அவுட்டோர் உலக சாதனையாக இருந்தது.

மேலும், அர்மாண்ட் டுப்லாண்டிஸ், இண்டோர் போல்வால்ட் சாதனையான 6 மீட்டர் & 18 சென்டிமீட்டர்கள் உயர சாதனையை தன்னகத்தே வைத்துள்ளார். தற்போது, அவுட்டோர் சாதனையும் இவர் வசம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“இறுதியாக – உலக சாதனை! இது இதமாக உள்ளது. ஒவ்வொருவரும் இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு எனது தோளில் ஒரு சுமையாக இருந்தது. தற்போது, இந்த சாதனையின் மூலம், அந்த சுமையை இறக்கி வைத்துள்ளேன். இதில், எனக்கு மகிழ்ச்சியைவிட, நிம்மதியே அதிகம்” என்றுள்ளார் அவர்.