சென்னை: ஊதியம் குறைக்கப்பட்டதை கண்டித்து ஸ்விக்கி நிறுவன உணவு டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சென்னையில் பல இடங்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று, வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன.

தற்போது, கொரோனா ஊரடங்கு எதிரொலியாக, இவர்களுக்கு டெலிவரி சார்ஜ் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதை கண்டித்து அவர்கள் சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறி உள்ளதாவது: இந்த 3 மாதங்களாக கடுமையாக சிரமப்பட்டு வருகிறோம். எந்த மாத ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை. தினசரி ஊக்கத் தொகையாக அது மாற்றப்பட்டது.

கொரோனா காலத்தில் ஒவ்வொரு ஊழியர்களுக்கு 100 பேருக்கும் மேலாக உணவு வினியோகித்து உள்ளோம். உணவு டெலிவரி செய்தால் தரப்படும் தொகையும் குறைக்கப்பட்டு உள்ளது.

முன்பு 12 கிலோ மீட்டர் தூரம் சென்று உணவு டெலிவரி செய்தால் 110ம்,  17 கிலோ மீட்டர்க்கு 170ம் டெலிவரி சார்ஜ் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது, 12 கிலோ மீட்டருக்கு 61  மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு டெலிவரிக்கும் கூடுதலாக வழங்கப்பட்ட 5ம்  தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

ஆகையால் நாள்தோறும் 200 ரூபாய் சம்பாதிப்பதே கஷ்டமாக உள்ளது. குடும்ப செலவு, குழந்தைகளின் கல்வி கட்டணம்  ஆகியவற்றுக்கு போதிய வருமானம் இல்லாமல் சிரமப்படுகிறோம். எனவே, பழைய டெலிவரி சார்ஜையே மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.