டெல்லி: தனது ஊழியர்களில் 1100 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக பிரபல ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏராளமான தொழில்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில், உணவு வினியோகம் செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விகி, தமது ஊழியர்களில் 1100 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த தகவலை ஊழியர்களுக்கு இ மெயில் மூலம் அனுப்பி இருக்கிறது. இது குறித்து ஸ்விகி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி கூறி இருப்பதாவது: துரதிஷ்டவசமாக அனைத்து மட்டங்களிலும் நாங்கள் எங்களது ஊழியர்களில் 1100 பேரை இழக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
நகரங்களிலும், தலைமை அலுவலகத்திலும் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். கொரோனா வைரசால் வணிகத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதையடுத்து, நீண்ட ஆலோசனைக்கு பிறகே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்து ஊழியர்களுக்கும் 3 மாதத்திற்கு சம்பளம் வழங்கப்படும்.
எங்களுடன் ஊழியர்கள் வேலை பார்த்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ஏற்ப நாங்கள் கூடுதலாக ஒரு மாதத்திற்கு தொகை வழங்குவோம். அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப மூன்று முதல் எட்டு மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படும்.
அதாவது 5 ஆண்டுகள் பணியில் எங்களுடன் இணைந்திருந்தால் அவர்களுக்கு 8 மாத ஊதியம் அளிக்கப்படும். ஏற்கெனவே, ஸ்விகியின் போட்டி நிறுவனமான ஜூமாட்டோவும் ஊழியர்களில் 13 சதவீதம் பேரை நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.