மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இந்த ஆண்டில் மட்டும் 221 பேர் இறந்துள்ளனர். புனேயில் மட்டும் நான்கில் ஒரு பங்கு பேர் இறந்துள்ளனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் இருந்து தலா இரண்டு பேர் வீதம் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மகாராஷ்டிரா சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘‘கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் 15 ஆயிரத்து 3 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தள்ளது. இவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது’’ என்று குடும்ப நல இணை இயக்குனர் முகுந்த் திகிகர் தெரிவித்துள்ளார்.

‘‘இதில் ஆயிரத்து 106 பேருக்கு கிருமி தாக்குதலுக்கான அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதில் 23 பேர் அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள்’’ என்றார்.

‘‘ ஜனவரி 1ம் தேதி முதல் கடந்த 26ம் தேதி வரை 221 பேர் இந்த நோய் தொற்று காரணமாக இறந்துள்ளனர். பருவ நிலை மாற்றம் காரணமாக கிருமி தொற்றலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது’’ என்று இந்த துறையில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் திகிக்கர் தெரிவித்துள்ளார்.

‘‘இருமல், காய்ச்சல், சளி போன்றவை பன்றி காய்ச்சலுக்கான அறிகுறியாகும். ஆனால், இத்தகைய பாதிப்பு உள்ள மக்கள் தாமதமாக தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இந்த அறிகுறியை பொதுவான இருமல் மற்றும் காய்ச்சல் என்று நினைத்து கொண்டது தான் பாதிப்பு அதிகரித்தற்கு காரணம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக பார்த்தால் புனேயில் 58 பேரும், நாசிக் மாவட்டத்தில் 30 பேரும், அவுரங்கபாத் மாவட்டத்தில் 20 பேரும், அகமத்நகர் மாவட்டத்தில் 19 பேரும், நாக்ப்பூர் மாவட்டம் விதர்பாவில் 17 பேரும் இறந்துள்ளனர். மாநிலத்தில் கிழக்கு மண்டலத்தில் தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமராவதி மாவட்டத்தில் விதர்பாவில் 12 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.