மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்: மகராஷ்டிராவில் 20 பேர் பலி
புனே:
மகாராஷ்டிர மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 20 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் ஸ்வைன் புளு என்ற பன்றிக் காய்ச்சல் நோய் தற்போது மகராஷ்டிர மாநிலத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளில் பரவி வந்த ஸ்வைன் புளு என்ற பன்றிக் காய்ச்சல் கடந்த ஆண்டு இந்தியாவில் பரவியபோது, மத்திய மாநில அரசுகளின் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை நடத்தப்பட்டன. பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அரசு மருத்துவமனைகளின் தனி அறையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புனே, மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்த பலருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அடியோடு ஒழிக்கப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பிமப்ரி-சின்சுவாட் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 6 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிமப்ரி-சின்சுவாட் மாநகராட்சி சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, செப்டம்பர் மாதம் பிப்ரி-சின்சுவாட் பகுதியில் பன்றி காய்ச்சல் காரணமாக 6 பேர் இறந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 20 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மேலும் 110 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பற்று வருவதாகவும், ஸ்வைன் ஃப்ளு மற்ற பகுதிகளுக்கு பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துஉள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.