சென்னை திருநங்கைக்கு அடைக்கலம் அளிக்க சுவிஸ் அரசு மறுப்பு

சென்னை

சென்னையை சேர்ந்த லிவிங் ஸ்மைல் வித்யா என்னும் திருநங்கைக்கு அடைக்கலம் அளிக்க சுவிட்சர்லாந்து அரசு மறுத்துள்ளது.

லிவிங் ஸ்மைல் வித்யா என அழைக்கப்படும் திருநங்கை வித்யா புகழ்பெற்ற நாடகக் கலைஞர் ஆவார்.   இவர் சாதி ஒழிப்பு, பார்ப்பனீயம் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்.    இவருடைய புரட்சிகரமான கருத்துக்களால் பலரும் இவரை எதிர்த்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர் சாதி வேறுபாடு மற்றும் பார்ப்பனீயம் குறித்து தெரிவித்த கருத்துக்களை ஒட்டி இவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.  அத்துடன் இவருக்கு சமீபத்தில் ஒரு விபத்து நடந்து அதில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.   இந்த விபத்து இவரைக் கொல்ல நடந்த சதி என வித்யா அச்சம் தெரிவித்தார்.

இதனால் இந்தியாவை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் வசிக்க வித்யா முடிவு செய்தார்.   அதற்காக அவர் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி அன்று சுவிட்சர்லாந்து அரசுக்கு அடைக்கலம் கோரி விண்ணப்பம் ஒன்றை அளித்தார்.    தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனவும் தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் கூறி இருந்தார்.

அவரது வேண்டுகோளை சுவிட்சர்லாந்து அரசு நிராகரித்துள்ளது.   இது குறித்து லிவிங் ஸ்மைல் வித்யா தனது முகநூலில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், “சுவிஸ் அரசு எனக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துள்ளது.   அந்த அரசு அதிகாரிகள் நான் படித்தவள் எனவும் ஆங்கிலம் தெரிந்தவள் எனவும் அதனால் இங்கேயே ஒரு வேலையை தேடிக் கொள்ளலாம் எனவும் கூறி உள்ளனர்.

அத்துடன் நான் அமெரிக்கா மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் சென்று புகழ் பெற்றவள் எனவும் அதனால் இந்தியாவில் எனக்கு அச்சுறுத்தல் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.   மேலும் எனது சுயசரிதைப் புத்தகம் திரைப்படம் ஆகி இருப்பதால் நான் புகழ் பெற்றவளாக இருப்பதால்  மத்திய அரசும் தமிழக அரசும் எனக்கு முழுபாதுகாப்பு அளிக்கும் என்பதால் எனக்கு அடைக்கல அளிக்க மறுத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Swiss govt refused to give asylum to chennai transgender woman
-=-