கொரோனா தடுப்பிற்கென தனி பேக்கேஜ் அறிமுகம் செய்த சொகுசு ஹோட்டல்!

ஜெனிவா: சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் ஒன்று, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்வைத்து தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஆல்ப்ஸ் மலை நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள லே பிஜோ என்னும் தானியங்கி மயமாக்கப்பட்ட வசதியுள்ள சொகுசு ஓட்டல் ஒன்று, கொரோனா பரிசோதனை, டாக்டர்கள் மற்றும் 24 மணிநேர செவிலியர்கள் கண்காணிப்புடன் கூடிய புதிய பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.

தனி சமையலறை, உடற்பயிற்சிக் கூடம், மசாஜ் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மனிதர்களின் உதவியின்றி சொகுசு ஓட்டலின் பிரத்யேக ஆப் முலம் பெற்றுகொள்ளலாம். கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றுடன் 14 நாட்கள் வரை தங்குவதற்கு இந்திய மதிப்பில் ரூ.58.33 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஹோட்டல் நிர்வாகத்தார், “கொரோனா பாதிப்பில் இருந்து விலகியிருக்க, சொகுசு அறைகள் வேண்டுமென சில வாடிக்கையாளர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. எனவே விருந்தினர்களை ஈர்க்க தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் குறித்து விளம்பரப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இரண்டு விசாரணை மட்டுமே வந்தது. அடுத்து நான்கு, ஐந்து, ஆறு என அதிகரித்துள்ளது.

ஒருநாள் இரவுகூட தங்கலாம் என்றாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இரு வாரங்கள் மற்றும் இரண்டு மாதங்களை தேர்வு செய்கிறார்கள். ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானவர்கள் ஹோட்டலில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மாறாக, லேசான அறிகுறியுடன் இருப்பவர்கள் தங்க அனுமதிக்கப்படுவர்” என்றனர்.

இதேபோன்று ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் சிலவும், கொரோனாவை மையப்படுத்தி பேக்கேஜ்களை அளித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.