சிட்னி டெஸ்ட்டை டிரா செய்த இந்தியா – மாரத்தான் இன்னிங்ஸ் ஆடிய விஹாரி & அஸ்வின்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான சிட்னி டெஸ்ட்டை ‘டிரா’ செய்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடர் தற்போதைக்கு சமனாகியுள்ளது.

இந்தியாவுக்கு இலக்காக 407 ரன்களை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. ஒருநாளைக்கும் மேலாக ஆட்டம் பாக்கியிருந்த நிலையில், இந்தியா தோற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய அணி வீறுகொண்டு ஆடியது. துவக்க வீரராக ஆடிய ரோகித் ஷர்மா 52 ரன்கள் அடித்தார். ஷப்மன் கில் 31 ரன்களை சேர்த்தார். கேப்டன் ரஹானே 4 ரன்களுடன் போய்விட்டாலும், மற்ற பேட்ஸ்மென்கள் தளர்ந்து விடவில்லை.

மொத்தம் 205 பந்துகளை சந்தித்த புஜாரா, 77 ரன்களை அடித்து அவுட்டானார். அணிக்கு இது பெரியளவில் உதவியது எனலாம். ஆனால், அதற்கடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆடியதுதான் மரண ஆட்டம். கிட்டத்தட்ட ஒருநாள் போட்டியைப் போல் ஆடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அலறச் செய்துவிட்டார்.

மொத்தமே 118 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 3 சிக்ஸர்கள் & 12 பவுண்டரிகளுடன் 97 ரன்களை விளாசி, ஆஸ்திரேலிய பவுலர்களின் மனஉறுதியை சுத்தமாக குலைத்துவிட்டார்.

அவர் வெளியேறியதும், பொறுப்பு அனுமன் விஹாரி மற்றும் அஸ்வின் தோள்களில் ஏறியது. இவர்களும், நிலைமையை உணர்ந்து மிகவும் நிதானமாக ஆடினார்கள்.

மொத்தம் 161 பந்துகளை சந்தித்த விஹாரி எடுத்தது 23 ரன்கள் மட்டுமே. அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களை அடித்தார். இவர்களை, எவ்வளவோ முயற்சி செய்தும் 6 ஆஸ்திரேலிய பவுலர்களால் எதுவுமே செய்ய இயலவில்லை.

முடிவில், 131 ஓவர்கள் ஆடிய இந்திய அணி, 5 விக்க‍ெட்டுகளை மட்டுமே இழந்து, 334 ரன்களை அடித்து போட்டியை ‘டிரா’ செய்தது. இதன்மூலம், இந்தப் போட்டித் தொடர் இப்போதைக்கு சமனாகியுள்ளது.

இந்திய அணியில் ஜடேஜா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் காயமடைந்தும், கோலி போன்றவர்கள் இல்லாதபோதும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.