சென்னை

ந்திய கிரிக்கெட் வீரர் சையத் கிர்மானி ஒரு நிகழ்வில் கண் தானம் செய்வதாகக் கூறி பின் தானம் செய்ய மறுத்துள்ளார்.

சமீபத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் ராஜன் கண் வங்கி இணைந்து சென்னையில் ஒரு கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.    இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் கிரிக்கெட் பிரபலம் சையத் கிர்மானியும் ஒருவர்.   இவர் கடந்த 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்ற போது விக்கட் கீப்பராக இருந்து வெற்றிக்கு ஒரு துணையாக விளங்கினார்.

கிர்மானி இந்த விழாவில், ”நான் என் கண்களை தானம் செய்யப் போகிறேன்.    நீங்கள் அனைவரும் இதே போல தானம் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.   பிறகு தனது உறுதி மொழியில் இருந்து பின் வாங்கி தானம் தர மறுத்துள்ளார்.  இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கிர்மானி, “கண் மருத்துவர் ராஜனின் கண் தான விழிப்புணர்வு முகாம் என்னை நெகிழ்வில் ஆழ்த்தியது.   அதனால் உணர்ச்சி வசப்பட்டு நான் கண் தானம் செய்வதாக வாக்களித்து விட்டேன்.   ஆனால் எனது மதம் காரணமாக என்னால் என் வாக்குறிதியை நிறைவேற்ற முடியவில்லை.   அதிகம் பேர் நமது நாட்டில் வாக்குறுதிகளை காப்பாற்றுவதில்லை.    ஆனால் மற்றவர்கள் என் முடிவால் பின் வாங்கக் கூடாது.   தானம் செய்ய முன் வர வேண்டும்”  என கூறி உள்ளார்.

இது குறித்து கண் மருத்துவர் ராஜன் ”இந்த பின் வாங்கல் குறித்து நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.   நிகழ்ச்சியில் கிர்மானி கலந்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.   பின்னர் கிர்மானி கூறியது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.   அவரால் கண்களை தானம் செய்ய முடியவில்லை என்றாலும் எனக்குப் பரவாயில்லை”  என தெரிவித்துள்ளர்.