சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படை  நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பொதுமக்கள் பலியானார்கள்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக   கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதையடுத்து அதிபர் ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் போர் நடந்துவருகிறது.  கடந்த ஆறு  ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள்  பலியாகி இருக்கின்றனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும்  போரிட்டு  வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கியது. இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் அதிபர் ஆதரவு படை – ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில்  கடும்  தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.  சில நகரங்களையும், விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. ஏற்பாடு செய்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் பலியானதாக  சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.