டமாஸ்கஸ்:

சிரியாவில் போர் நிறுத்த தீர்மானத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படு வருவதால் நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

சிரியாவில் கடந்த ஏழு வருடங்களாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் தொடர்ந்து வருகிறது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போதும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது விமர்சனத்திற்குள்ளானது. அங்கு சிறுவர்கள் போரில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிரிய ராணுவம் விஷவாயு தாக்குதலை அவ்வபோது நடத்தி வருகிறது. உலக  நாடுகளின் கண்டனத்தை மீறி ரஷியாவின் உதவியுடன் அல் ஆசாத் அரசு அடாவடியான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக விமர்சனம் எழுந்துவருகிறது.

சிரியாவில் கிழக்கு கூட்டா பகுதியை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகளும், ரஷிய படைகளும் இணைந்து 8 நாட்கள் நடத்திய தாக்குதல்களில் 560–க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என அங்கு உள்ள மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

இதையடுத்து,  ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்தது. இதன் விளைவாக ரஷ்ய அதிபர் புதின் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதன்படி தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால்,   கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்  பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கிளர்ச்சியாளர் பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்லவோ, அங்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை வெளியேற்றிக் கொண்டு வரவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டி இருக்கின்றன.