புதுடெல்லி:
சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுத்தியுள்ளார்.

“இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை. ஆனால் அரசு முக்கியத்துவம் கொடுப்பது எதற்கு?” என மத்திய அரசு புதிதாக கட்டும் மத்திய பொது செயலக கட்டுமான பணி தொடர்பான ஏலத்துக்கான டெண்டரை கோரியுள்ள செய்தியை மேற்கோள் காட்டி இந்த கேள்வியை ட்விட்டரில் எழுப்பி உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

முன்னதாக, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் குறைபாடு ஆகியவற்றால் பொதுமக்கள் உயிரிழப்பதற்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், கொரோனாவால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையக்கூடும் என்றபோதிலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் தான் தற்போதைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், தடுப்பூசிகளுக்கு பல விலைகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு பாரபட்சமானது மற்றும் பிற்போக்குத்தனமானது என்று குறை கூறியிருக்கிறார். இந்த முடிவை மாநிலங்கள் ஒருமனதாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநிலங்கள் கூட்டாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.”