இமானுவேல் சேகரனின் 62வது நினைவு தினம்: தமிழக அமைச்சர்கள், ஸ்டாலின் அஞ்சலி

பரமக்குடி:

மானுவேல் சேகரனின் 62வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிமுக அமைச்சர்கள் அஞ்சலி

சுதந்திர போராட்ட வீரரும், தலித் தலைவருமான இம்மானுவேல் சேகரன் நினைவிடம்  பரமக்குடி அரசுப் போக்குவரத்து பணிமனை பகுதியில் அமைந்துள்ளது. இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்பட  அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சமுதாய அமைப்பினர் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

அதிகாலையிலேயே அருகிலுள்ள ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அதிமுகவுக்காக ஒதுக்கப்பட்ட காலை 8:30 மணி – 9 மணிக்குள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

அதுபோல, திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 மணி முதல் 10:30 மணி வரையிலான நேரத்தில்,  திமுகழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி. சுப.தங்கவேலன். தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறையினர் பாதுகாப்பு

இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு,  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அஞ்சலி செலுத்த வருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடும் வகையில் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 500 மீட்டர் உயரத்தில் பறக்கும் ஆளில்லா விமானம் மூலம், 3 கி.மீ. சுற்றளவில் நடக்கும் சம்பவங்களை கண்டறிய முடியும் என்று அஞ்சலி செலுத்த வருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார். மேலும்,  ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ் வரன் தலைமையில் 5 காவல் சரக துணைத் தலைவர்கள், 18 காவல் கண்காணிப்பாளர்கள், 44 துணைக் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.