முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்!

சென்னை: வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தனது 87வது வயதில் சென்னையில் காலமானார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த 1932ம் ஆண்டு பிறந்தவர் சேஷன். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்புகளை முடித்து, பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வானார். தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தார். பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ஆட்சியராக காமராஜர் ஆட்சியின்போது பணியாற்றினார்.

இவர் நாடெங்கிலும் மிகவும் பிரபலமானது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த காலத்தில்தான். கடந்த 1990 முதல் 1996ம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாகப் பதவி வகித்தார்.

அப்போது பல தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததற்காக இவர் பேசப்பட்டார். கடந்த 1996ம் ஆண்டு பொதுத்தேர்தலை இவர் கடைசியாக நடத்தினார். இவர் 1997ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மேலும், கடந்த 1999ம் ஆண்டு காந்தி நகர் மக்களவைத் தொகுதியில், மூத்த பா.ஜ. தலைவர் அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டும் தோல்வியடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். சென்னை அடையாறில் சேஷன் வசித்து வந்தார்.