இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார் நடராஜன்

 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

ஆஸ்திரேலிய அணியுடனான டி-20 போட்டி தொடரை வெல்ல முக்கிய பங்களித்த நடராஜன், பின்னர், நடந்த ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் வருண் சக்ரவர்த்திக்கு மாற்றாக அணியில் இடம் பெற்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் தனது கணக்கை துவங்கினார்.

வலை பயிற்சியின் போது பந்து வீசும் நடராஜன்

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளாயாடும் இந்திய அணிவீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபடும் போது பந்து வீசுவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்த நடராஜன், தற்போது டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமத் ஷமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜனும், ஷமிக்கு பதிலாக ஷரத்துல் தாகூரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உமேஷ் யாதவுக்கு இடது முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாலும், ஷமிக்கு வலது மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாகவும் விளையாட முடியாமல் போனதை அடுத்து, இருவரும் பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய புத்துணர்ச்சி முகாமில் சிகிச்சை பெற இருக்கின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள நடராஜனுக்கு ஜனவரி 7 ம் தேதி நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பதினோரு பேர் கொண்ட அணியில் கேப்டன் ரஹானே வாய்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.