சென்னை தி.நகரில் உள்ள  தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர். அப்போது அவரிடம்  “சின்னம்மா சி.எம். ஆகப்போகிறார் என்று செய்தி வருகிறதே” என்று ஒரு செய்தியாளர் கேட்டார்.

அதற்கு டி.ராஜேந்தர் கிண்டலாக, “எங்க சின்னம்மாவா, உங்க சின்னம்மாவா” என்று கேட்டார். மேலும், “மொட்டத்தாத்தன் குட்டையில விழுந்தான்கிற மாதிரி பொத்தாம் பொதுவா சொல்லக்கூடாதுல்ல” என்றும் டி.ராஜேந்தர் கேட்டார்.

மேலும்,  “சின்னம்மா.. ஆக வேண்டும் சி.எம்.மா… என்று நான் சொல்ல மாட்டேன்.  அதைச் சொல்ல வேண்டியது. அ.தி.மு.க.தான். அங்கே போய் கேளுங்க” என்றவர்,  “ஆனா  தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் வருகிறார்கள்” என்றார்.

அப்பல்லோ மர்மம்

ஜெயலலிதா மரணம் குறித்து, “ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்றதும் அவரது முடிவும் மர்மக்கதை போல் உள்ளது. அதற்கு சசிகலா பதில் சொல்லவேண்டும்” என்றார்.

மேலும், “நான் எடுக்கும் படம் பற்றி கேட்கிறார்கள். அங்கே வீசிக்கொண்டிருக்கிறது அலை. அங்கே நடந்திருக்கிறது கொலை. இனிதான் காவல்துறை வீச வேண்டும் வலை. இது அவர்களுக்கு கைவந்த கலை” என்றார் டி.ராஜேந்தர்.

மனம் நொந்து…

தொடர்ந்து அவர், “மனம் நொந்து சொல்கிறேன். அ.தி.மு.க தலைவிக்கு இப்படியோர் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் மேல் மட்டத்தில் இருக்கும் 2500 பேர் மட்டும்தான் அ.தி.மு.க.வா?

அந்த அம்மாவுக்கு எப்படி இந்த நிலைமை ஏற்பட்டது என்று கேட்க முடியாத நிலை… இப்படி ஒரு கட்சியா? மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அப்படியானால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் தமிழகத்தில் செய்வோம், எங்களை யாரும் கேட்க முடியாது  என்கிற நிலைமை இருந்தால் நாடு தாங்காது.

அப்படித்தான் தமிழகத்தின் நிலை இருக்கிறது.

அம்மா (ஜெயலலிதா) ஆட்சியில் இருந்தவரை எங்கே சென்றது அந்த  (சசிகலா) குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர். அவங்களுக்கு அம்மா ஒரு கவுன்சிலர் பதவியாவதுகொடுத்தாங்களா. அப்போது அவர்கள் எங்கே சென்றார்கள்?

ஆனால் அம்மா இறந்தவுடன், தலைமாட்டில் வந்து நிற்கிறார்களே..  இது என்ன நியாயம்? இதை அ.தி.மு.க. தொண்டர்களே கேள்வி கேட்கிறார்கள்.

இன்று பாருங்கள்.. சைதை துரைசாமிக்கு பதவி, செங்கோட்டையனுக்கு பதவி, நயினார் நாகேந்திரனுக்கு பதவி… அதாவது ஓரம்கட்டப்பட்டவர்களை இப்போது உள்ளே இழுக்கிறார்கள்” என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வம்..

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறித்த கேள்விக்கு, “அம்மா இருந்தபோதே, ஓ.பன்னீர் செல்வத்துக்குத்தான் முதல்வர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அம்மாவும் கொடுத்தார். ஆண்டவரும் கொடுத்தார், அந்த வாய்ப்பை. ஜல்லிக்கடு விசயத்தில் கூட சிறப்பாக செயல்பட்டார். நானும் பாராட்டியிருக்கிறேன்” என்றார்.

போராட்டம்

தனது போராட்ட குணம் பற்றி, “இன்று பலர் அ.தி.மு.க. பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஜெயலலிதாவை சட்டசபையில் வைத்து சேலையை இழுத்தார்களே.. அன்று யார் கண்டித்தார்கள். நான் கண்டித்தேன். அப்போது எனக்கு கல்லடியும் சொல்லடியும் கிடைத்தது.  நான் கட்டிய வீட்டை கலைஞர் ஆட்சியில் இடித்தார்கள். அப்போது எனக்கு ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை. நான் தனித்தே போராடியிருக்கிறேன்.

அவ்வளவு ஏன்.. கலைஞரை கைது செய்தபோது, மத்திய சிறைச்சாலைக்குச் சென்று போராடினேன். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது நான்தான் பாண்டிபஜாரில் தர்ணா செய்தேன்” என்றார்.

செல்வாக்கு

அரசியல் செல்வாக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பர்கூரில் தனித்து நின்று நாற்பதாயிரம் ஓட்டுக்கு மேல் வாங்கினேன். நான் எதிர்த்தி நின்றது சாதாரண ஆள் இல்லை. வேறு யாராவது இப்படி போட்டியிட முடியுமா.. அப்படி போட்டியிட்டால் நானூறு ஐநூறு ஓட்டுக்கள்தான் வாங்குவார்கள். ஆக எனது செல்வாக்கு பெரியது.

இப்போது பத்திரிகையில் யார் யாருக்கோ போடுகிறார்கள் வண்ணப்படம்.. ஆக இந்த நாட்டில் இருக்கணும் கலப்படம்.. அது இருந்தால்தான் போடுவீங்க கலர்ப்படம்.. அது வேறு விசயம்” என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது…

போட்டி

இன்று முளைத்த காளான்கள் எல்லாம் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். நிச்சயமாக நாங்களும் போட்டியிடுவோம். அது லட்சிய திமுகவாக மட்டும் இருக்காது. தகுந்த கட்சிகளோடு இணைந்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு டென்சனை ஏற்படுத்துவோம். தி.மு.க. – அ.தி.மு.க.வுக்கு மாற்று அணியை உருவாக்குவேன்.

முதல்வர்

அதற்காக நான் முதல்வர் ஆவேன் என்று சொல்லவில்லை. அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

திராவிட மாயை

திராவிட பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டே இருந்தது போய், தற்போது வேறு ஒரு நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. திராவிடம் என்று இங்குதான் சொல்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் யாரும் திராவிடம் என்பது கிடையாது.

விஷால்

விஷால் தலைவராக நிற்பது என்பது தமிழ்நாட்டில் தான் நடக்கும். ஆந்திராவில் நான் போய் நிற்க முடியாது. அங்க நானும் மெம்பர்.  ஆனால நான் போய் அங்கே நிற்க முடியாது.

தமிழ்நாடு

தமிழ்நாடு என்பது ஒரு செவ்வாய் பூமி. தமிழ்க் கடவுள் முருகன். அவன் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவன். அந்த செவ்வாய் ஆதிக்கம் உள்ள, தமிழ் உணர்வுள்ள ஒரு தமிழர் வந்துவிட்டால் இந்த தமிழ்நாடு வாழுமா என்பதே என் ஏக்கம்.

தமிழகத்தில் தண்ணீர் கிடைக்கலை. தஞ்சை விவசாயி தன் பயிர் கருகுவதை கண்டு தற்கொலை செய்துகொள்கிறான். அவனுக்கு நிவாரண நிதியும் கிடைக்கலை. ஏன் இந்த நிலை?

50 நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தும் இந்த நிலை! ஏன், மத்திய அரசை மாநில அரசு தட்டிக்கேட்பதில்லை?  தமிழ்நாடு அரசுகிட்ட ஏதே வீக்னஸ் இருக்கு!

அதிரடி

பேட்டி முடியும் தருவாயில், “இன்று அதிரடியான செய்திகளை சொல்லப்போவதாக கூறினீர்கள். ஆனால் அதிரடியாக ஏதும் இல்லையே.” என்று கேட்டார்.

அதற்கு டி.ஆர், “இதைவிட அதிரடி என்றால் வேறு எங்காவது போய் பிரஸ்மீட் கவர் பண்ணுங்க ஏன் இங்கே வர்றீங்க. இவ்வளவு துணிச்சலா கேள்வி

யோவ்.. ஏவி மெய்யப்பச் செட்டியார் வீட்டிலேருந்து இந்த டி.ராஜேந்தர் வரல… நாகிரெட்டி வீட்டிலேருந்து வரல…  மாயவரம் வடக்கு தெரு  தேசிங்க உடையாருக்கு மகனா பிறந்து இவ்வளவு பெரிய ஆளா வந்திருக்கேன்.

நீ என் குறள் டிவியில வேலை பார்க்கும்போது எப்படி கவர் வாங்கி பிழைச்சேனு தெரியும். நீ என்கிட்ட கேள்வி கேட்கிற. அந்த குறள் டிவியையே உருவாக்கி குரல் கொடுக்கக்கூடிய எனக்கு எவ்வளவு தில் இருக்கும்?” என்றார்