போதை பொருள் கடத்திய டேபிள் டென்னிஸ் வீரர் கைது

மும்பை:

தேசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப் பொருளுடன் சிக்கினார்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் லால்ரின் புயா (வயது19) கைது செய்யப்பட்டார். லால்ரின் 2015ம் ஆண்டு தர்மசாலாவில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர். தற்போது டில்லியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.

இவர் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப் பொருளுடன் வர உள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விமானநிலையத்தில் வைத்து லால்ரின் புயாவின் பையில் சோதனை நடத்தினர்.

அவரது பையில் 3.9 கிலோ போதைப்பொருள் இருந்தது. அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.60 லட்சம். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டில்லியில் உள்ள அவரது அறையில் சோதனை நடத்தவுள்ளனர்.