தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருக்கிறது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில், கடந்த மார்ச் மாதம் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெளிநாட்டினர் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகாமானோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு, கொரோனா உறு‌தி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கலந்துகொண்டதாக 83 வெளிநாட்டினர் மீது, குற்றப்பத்திரிக்‍கைகள் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று கோரி  சுப்ரியா பண்டிடா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, டெல்லி மாநாடு தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதால், சிபிஐ விசாரணை தேவையில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி குற்றப்பிரிவு போலீசின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படுகிறது. விசாரணை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்யப்படும். எனவே சிபிஐ விசாரணைக்கான வேண்டுகோள் தேவையில்லை. இந்த பிரச்சினையை கையாள்வதில் எந்த அலட்சியமும் தாமதமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

You may have missed