தாஜ்மகால்: சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு!

ஆக்ரா:

தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்யை குறைக்க மத்திய தொல்பொருள் ஆய்வுகழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகாலை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இதனால் தாஜ்மகாலின் அமைப்புக்கும், அழகுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே தாஜ்மகாலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தொல்பொருள் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இதன் காரணமாக தாஜ்மகாலை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2012-ம்ஆண்டு முதல் குறைந்தது.

2012 -ல் 7.34 லட்சம் வெளிநாட்டவர்கள் தாஜ்மகாலை கண்டுகளித்தனர்.

2013-ல் அது 6.95 லட்சமாக குறைந்தது. 2014-ல் 6.48 லட்சம் சுற்றுலா பயணிகளே வந்தனர்.

தாஜ்மகாலை பார்க்க வரும் வெளிநாட்டவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மட்டும் இன்னும் குறையவில்லை. அதையும் குறைக்க தொல்பொருள் ஆய்வுக் கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது.