எச்.ராஜா மீது நடவடிக்கை எடுங்கள்: தமிழகஅரசுக்கு புதுச்சேரி முதல் நாராயணசாமி கோரிக்கை

புதுச்சேரி:

தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்தும், கனிமொழி குறித்தும்  தரம் தாழ்த்தி பதிவுபோட்ட  எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

கனிமொழி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பதிவுக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ள நிலையில், திமுகவினர் ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எச்.ராஜாவின் தரம் தாழ்ந்த விமர்சனம் சரியல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி என்று கடுமையாக தாக்கி பேசினார்.  தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார் என்றும்,  திமுக. தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து தரம் தாழ்த்தி விமர்சித்த  எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வயுறுத்தினார்.

எச்.ராஜா இதுபோன்று எதையாவது பேசி, தமிழகத்தின் பிரச்சினைகளை திசை திரும்பி வருவதாகவும், ஆனால்,  தமிழகத்தின் பிரச்சினைகள் நீர்த்து போகாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், புதுவையில் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய நிதித்துறைக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத இருப்பதாகவும்,  மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed