சட்டவிரோத கேன் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்! உயர்நீதி மன்றம்

சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கும் கேன் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், இது தொடர்பாக வரும் 19ந்தேதி விரிவான பதில் அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஏராளமான குடிநீர் ஆலைகள் சட்டவிரோத செயல்பட்டு வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டியதால், உரிமம் பெறாத 132 ஆலைகளை மூட அதிரடியாக உத்தரவிட்டது. மேலும்,  சட்டவிரோத குடிநீர் ஆலைகளை உடனே மூட உத்தரவிட்ட நீதிமன்றம், அதுகுறித்து  மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் குடிநீர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நேரத்தில் கொரோனா தொற்று பரவலும் தொடங்கியதால், தேவையற்ற பிரச்சினை எழ வாய்ப்பு உள்ளதாக  நடவடிக்கை எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்க வந்தத. அப்போது,  நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே  நீதிமன்ற உத்தரவு படி 15% நீரை மக்கள் பயன்பாட்டிற்கு ஆலைகள் இலவசமாக வழங்க வேண்டும், ஆனால், இதுவரை எந்தவொரு ஆலையும் இலவசமாக நீரை வழங்கவில்லையே ஏன்? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன்,  ஏழைகளுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மூடிவிடலாம் என கருத்து தெரிவித்தனர்.

மேலும், நிலத்தடி நீர் எடுக்கும் அளவை கணக்கிடும் கருவிகள் பொருத்தக் கட்டணம் நிர்ணயிக்க முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக அரசு வரும் 19ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.