சென்னை,

மாநில உரிமைகளைப் பறிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

”மருத்துவக் கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில், மாநில உரிமைகளை மீண்டும் பறித்து அத்துமீறல் நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் எனும் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பாஜக அரசு ஈடுபட்டிருப்பதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

தேசிய மருத்துவக் கவுன்சிலை ஆட்டிப்படைத்து அலைக்கழித்த, ‘கேதன் தேசாய்’ ஊழல் விவகாரத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட ரஞ்சித் ராய் சவுத்ரி நிபுணர் குழு அறிக்கை, அதன்பிறகு 92-வது அறிக்கையை அளித்த ராம்கோபால் யாதவ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகள் முழு அளவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல், பிரதமர் அலுவலகக் கூடுதல் செயலாளர் தலைமையில் புதிதாக ஒரு கமிட்டியை அமைத்து, பாதி கிணறு தாண்டும் பாணியில், அதன் பரிந்துரைகளுக்கு மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்வடிவம் கொடுக்க அவசரம் காட்டுகிறது.

நிபுணர் குழு, நாடாளுமன்ற நிலைக்குழு கொடுத்த பரிந்துரைகளில், ”ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணம் அதிகார பூர்வமாக 12 முதல் 13 லட்சம் ரூபாயாகவும், கேபிட்டேஷன் கட்டணம் 50 லட்சம் முதல் 1 கோடி வரை போகிறது” என்ற அவலத்தைச் சுட்டிக்காட்டி, ”தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதைக் கண்டிப்புடன் நிறைவேற்ற வேண்டும்” என்று பரிந்துரைத்தது.

ஆனால், இந்தப் பரிந்துரையை உள்நோக்கத்துடன் நிராகரித்துள்ள கூடுதல் செயலாளர் தலைமையிலான ஒரு குழு, ”மருத்துவக் கல்லூரியில் உள்ள 60 சதவீத இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்”, என்று அனுமதி அளித்து, தனியார் மயத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக, ”கல்விக்கட்டணத்தில் அரசு தலையிட்டால் தனியார் கல்லூரிகள் வராது” என்று கூடுதல் செயலாளர் தலைமையிலான குழு குறிப்பிட்டிருப்பது, மருத்துவக் கல்வியை தனியாருக்குத் தாராளமாகத் தாரை வார்ப்பதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்ற ஓரவஞ்சனையை உறுதி செய்கிறது.

இதுதவிர, புதிதாக அமைக்கப்படும் தேசிய மருத்துவ ஆணையத்தில் ரஞ்சித் ராய் சவுத்ரி கமிட்டி குறிப்பிட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக அதிகரித்து, இப்போது 25 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையமாக உருவாக்கும் நிலையில் கூட, மாநில அரசுகளுக்கு, குறிப்பாக அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசின் பங்கை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதாக அமைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, அறிக்கை கொடுத்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு தமிழக அரசின் சார்பில் ஆஜராகி கருத்து சொன்னவர்கள், மாநிலப் பட்டியலில் உள்ள சுகாதாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவக் கல்வி தொடர்பான உரிமை, மாநிலத்தின் பிரத்யேக உரிமை குறித்து ஏன் வலியுறுத்திப் பேசவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதும், மத்திய அரசின் கட்டளைகளை மாநில அரசுகள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவ ஆணைய மசோதாவில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கத்தை அவமதித்துள்ளது.

ஏற்கெனவே நீட் தேர்வு மூலம் சமூக நீதியின் குரல்வளையில் காலை வைத்து நெறித்து அழுத்திக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, இப்போது தேசிய அளவிலான பொதுத்தேர்வு எழுதி விட்டுத்தான் மருத்துவர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்குவது ‘புதிய லைசென்ஸ் ராஜ்’ புகுத்தப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் கொந்தளித்துப் போயிருக்கும் மருத்துவர்கள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டிருப்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு தெளிவாக உணர வேண்டும்.

இதன் மூலமாக, மருத்துவ மேல்படிப்பிற்கும் ஒரு நீட் தேர்வு இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுக்குப் பிறகு நீட் தேர்வு மற்றும் எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தை முடித்த பிறகு, மீண்டும் ஒரு தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்றெல்லாம் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவுக்குத் தடுப்பணை கட்டித் தகர்ப்பதை, சமூக நீதி மீதான சம்மட்டி அடி என்றே திமுக கருதுகிறது. சமவாய்ப்பு, சமூக நீதி என்ற அரசியல் சட்டத்தின் நோக்கத்தையெல்லாம் அர்த்தமற்றதாக்கி, மருத்துவக் கல்விக்கும், மருத்துவர்களுக்கும், ஏழை – எளிய, மக்களுக்கும் முற்றிலும் விரோதமாக இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, கடுமையான அபராதங்கள், ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதியுடன் கூடிய வரமுறையற்ற நிபந்தனைகள் விதிப்பதுடன், மாநில உரிமைகளை மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் விதத்திலும், தனியார்மயம் கார்ப்பரேட் மயப்படுத்தும் உள்நோக்கிலும், மோட்டார் வாகனத் திருத்தச் சட்ட மசோதா 2017 கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாநிலங்களின் உரிமைகளை அப்பட்டமாகப் பறித்துக் கொண்டு, மத்திய அரசே அனைத்து விவகாரங்களிலும் எஜமானர் போல் நடந்து கொள்ள நினைப்பது மத்திய – மாநில உறவுகளில் சீர் படுத்த முடியாத சேதாரத்தை உருவாக்கி விடும் என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, ஏழை – எளிய, கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு, போராடும் மருத்துவர்களின் உணர்வு, குக்கிராமத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மாநில அரசின் உரிமை போன்றவற்றிற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அதுமட்டுமின்றி, அதிகார மனப்பான்மையுடன் இடம்பெற்றுள்ள கெடுபிடிகளைத் தளர்த்தி, போக்குவரத்து தேசிய மயக்கொள்கையை ஊனப்படுத்திவிடாமல், ஓட்டுநர்கள் உரிமம் பெறுவதில் நியாயமாக ஏற்கக்கூடிய நிபந்தனைகளை மட்டும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில், இன்றைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் மாற்றங்களை மட்டும் கொண்டுவந்து, மோட்டார் வாகனத் தொழிலையும், அதனையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது, திமுக சார்பில் இத்தகைய ஆணித்தரமான கருத்துகள் எடுத்து வைக்கப்படும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..