மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்: தமிழக அரசுக்கு ரஜினி ஆலோசனை

சென்னை:

மேகதாது அணை பிரச்சினை தமிழகத்தை பாதித்தால் சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் ஆலோசனை கூறி உள்ளார்.

‘பேட்ட’  படம் முடிந்து வெளியாக உள்ள நிலையில், தற்போது ஓய்வுவெடுத்து வரும் ரஜினி இன்று தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக தமிழகஅரசு தொடர்ந்த வழக்கிலும் திட்ட அறிக்கை தயாரிக்க  தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இந்த விவகாரத்தில்  மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது தான் இதற்கு ஒரே வழி.

ரிசர்வ் வங்கி கவர்னர் உள்பட முக்கிய உயர் அதிகாரிகள்  பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

 ரிசர்வ் வங்கி கவர்னர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்ற உண்மையை தெரியாமல் என்னால் பேச முடியாது.

நீங்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லி ஒரு வருடம் ஆகிறது…. இன்னும் அரசியல் குறித்து அறிக்கவில்லை… இப்போது உங்களின் அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?

அதை நிறைய முறை சொல்லி விட்டேன்….

 உங்களின் அடுத்த புதிய பட அறிவிப்பு எப்போது வெளியாகும்?

 “பேட்ட” படம் வெளி வந்ததும் அடுத்த படம் பற்றி பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.