மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம்: தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை:

மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம் தொடர்பான வழக்கில், தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை கூறி உள்ளது.  அங்கு சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்தை பகிர்வது குறித்து தமிழகஅரசுடன் பேசுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு சீன அதிபர் பிரதமர் மோடி சந்திப்பு தமிழகத்தின் தொன்மையான நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மாமல்லபுரம் உலக அளவில் மேலும் பிரபலமானது. சீன அதிபர் வருகையின் போது, மாமல்லபுரம் வண்ண விளக்குகளாலும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் அழகாக பராமரிக்கப்பட்டது. ஆனால், சீன அதிபர் சந்திப்பு முடிந்தவுடன் அலங்கார விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பால் கிருபாகரன் கருத்து தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.. அதை வழக்காக பதிவு செய்த நீதிமன்றம் விசாரணை நடத்தியது. கடந்த விசாரணையின்போது, பராமரிப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விவரங்களை ஒப்படைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும்  நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், யுனஸ்கோ-வால் புராதன சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகளுக்கு மத்திய அரசு தான் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

அதைத்தொடர்ந்து,  இந்திய தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட விவரத்தில், மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலித்த வகையில், 2018-19ம் ஆண்டுகளில் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கூறியது.

இதையடுத்து, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி, மத்திய – மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு குறித்தும், சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்தை பகிர்வது குறித்து தமிழகஅரசுடன் தொல்லியல் துறை கலந்து பேசவும் அறிவுறுத்தி உள்ளது.  மேலும், தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதித் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

கார்ட்டூன் கேலரி