இவரிடம் பேசினாலே மனசு குதூகலமாயிடும்… ! ஏழுமலை வெங்கடேசன்

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு

சார், தப்பு செஞ்சா நடவடிக்கை எடுத்து தண்டிச்சி அப்புறம் வாழ விடுங்க. ஆனா தண்டனையே குடுக்காம வருஷக்கணக்குல சாகடிக்கிறது என்ன நியாயம்?

இப்படித்தான் அவர் கேள்விகள் போகும். யோசித்து நிதானமாக வார்த்தைகளை கட்டமைத்து பேசிப்பார்த் தில்லை..விமர்சனங்களை பற்றியே கவலையே படாமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுவார்

நாம் அதிகம் சந்தோஷமாய் பேசக்கூடியவர்களில் மிக முக்கியமானவர். எப்போதும் அரசியலை தவிர்த்து விடுவார். அரசியலை தூக்கி கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு மனுஷன் பேச்சில் விளாசுவார்.

சின்ன வயசு குறும்புகள், விளையாட்டுகள், விதவித மான தின்பண்டங்கள் என ஒன்று விடாமல் பேச்சில் வடசென்னை வாழ்வியலை கலந்துகட்டி அடிப்பார்.

சினிமா, இசை, பாடல்கள் என்று ஆரம்பித்தால் எங்கே போய் முடியும் என்பதே தெரியாது. எந்த விஷயத்தை பேசி முடித்தாலும், முடிப்பதிலிருந்தே மேலும் பல விஷயங்களை சொல்கிற அளவுக்கு தொடர் ஞானம் உண்டு. நாம் ஒன்றை குறிப்பிட்டால் உடனே சம்மந்தமாய் பத்து விஷயங்களை சொல்லுவார்..

இவ்ளோ ரசணைகளையும் அடக்கிகிட்டு இந்த மனுஷனால எப்படி அரசியல்லயும் ஆட்சி அதிகாரத்துலயும் உலா வரமுடியுதுன்னு ஆச்சர்யமா இருக்கும்..

தன்னை பத்திவரும் மீம்ஸ்களை பார்த்து கோபப்பட மாட்டார். மூணு படங்களை இணைச்சி வன்மமாய் ஒரு மீம்ஸ்.. அதுக்கு சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்னு அர்த்தம் சொன்னப்போ, பாருப்பா, எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.. நம்ம பசங்களுக்கு எவ்ளோ கிரியேட் டிவ் மைண்ட்னு வியந்தபடியே அந்த விஷயத்தை ஜாலியாக கடந்துவிட்டார்..

உபசரிப்பில் மன்னன். தன் கையால் பரிமாறுவதையே அதிகம் விரும்புவார். உடல் நலத்திற்கான உணவு களை விவரிக்கும்போது, நாட்டு வைத்தியரே கெட்டார் போங்கள்.. வீட்டுக்கு வந்து செல்லும் மக்களுக்கு தனி ஏற்பாட்டின் பேரில் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகத்தில் சாப்பாடு தயாராக இருக்கும்.

உங்கள் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடியப்போகி றது என்று சொன்னால் நமட்டு சிரிப்புதான் பதிலாக வரும்..அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை அணு அணுவாக சுவாரஸ்யத்துடன் விவரிக்கும் அவர் , ஆன்மீகத்தை பற்றி பேசி நாம் கேட்டதில்லை.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..