இல.கணேசன்… தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். எதிர்க்கருத்துக்களையும் லாவகமாக கையாண்டு, சுவையோடு பதில்.. பதிலடி கொடுக்கக்கூடியவர். இலக்கிய ஆர்வலர்.

தற்போது ம.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாராளுமன்றத்தில் இவரது பேச்சுக்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

வழக்கமான “பரபர” பேட்டியாக இல்லாமல், அவரது பாராளுமன்ற பேச்சுக்கள், எம்.பி. பணி செயல்பாடுகள் என்று விரிவாகவே பேசினோம்.

நமது பத்திரிகை டாட் காம் இதழுக்காக அவருடன் பேசியதில் இருந்து…

கே: தமிழக அரசியலில் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தவர் நீங்கள்.  தற்போது ம.பி. மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். இரண்டுக்குமான வித்தியாசங்களை எப்படி உணர்கிறீர்கள்..

ப: வித்தியாசம் இல்லை என்று சொல்ல முடியாது. இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை முழுமையாக உணர்ந்தேன் என்றும் சொல்லமுடியாது.

பாரத நாடு முழுதும் எங்கு சென்றாலும்  அனுபவ ரீதியாக ஒரே மாதிரித்தான் உணர்கிறேன். தவிர நாங்கள் எல்லாம் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஆக இருந்தாலும் பா.ஜ.க.வாக இருந்தாலும் குடும்பம் போன்ற ஒரு உறவு, நட்பு இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இப்போதும் அப்படித்தான் உணர்ந்தேன்.

ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக ம.பி.யில் நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது அம்மாநில முதல்வரே வந்து  நல்ல முறையில் வரவேற்றார்…. அந்த அளவுக்கு அங்கே அனைவரும் பாசத்துடன், நேசத்துடன் பழகுகிறார்கள்.

நீங்கள் கேட்ட இதே கேள்வியை அங்கேயும் ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு நான், “திருமணம் ஆகி புது வீட்டுக்குச் செல்லும் மருமகளுக்கு,  மகிழ்ச்சியும் இருக்கும்.. அதே நேரம் புது இடத்துக்கு வருகிறோமே என்கிற உணர்வும் இருக்கும். நான் ஆணாக இருந்தாலும் அந்த உணர்வை உணர முடிந்தது என்று கூறினேன்.

கே: ம.பி. மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து..

ப: மிகச் சிறப்பான ஆட்சி முறை. அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரு முறை முதல்வராக இருந்து விட்டு, மூன்றாவது முறை ஆட்சி செய்கிறார். அந்த அளவுக்கு மக்கள் அவரை விரும்புகிறார்கள்.  அவரை முப்பது வருடங்களுக்கு முன்பே நான் அறிவேன். அப்போது இருந்தது போலவே பெரும் பொறுப்பில் இருந்தாலும் இப்போதும் அதே எளிமையோடு இயல்பாக பழகுகிறார் அவர்.

அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் முக்கியமானது, பள்ளி குழந்தைகள் பலர் பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்படுகிறார்கள். ஆகவே அரசாங்கேமே பின்தங்கிய பிரிவினர்களுக்கான கட்டணத்தைச் செலுத்திவிடும் என்றார்.

தவிர ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய எம்.பிக்களுக்கு வருடத்துக்கு 25 லட்ச ரூபாய் அளிக்கிறார். “அவர்களுக்கு கட்டணத்தை அரசே கட்டிவிடுகிறது என்றாலும், சிலருக்கு புத்தகமோ, கல்விக்கான கருவிகளோ வாங்க வேண்டியிருக்கலாம். ஆகவே வருடத்துக்கு 25 லட்ச ரூபாய் ஒவ்வொரு எம்.பிக்கும் மாநில அரசு அளித்து விடும். இதைப் பயன்படுத்த ஒவ்வொரு எம்.பிக்கும் செக் புக் அளிக்கப்படும். அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை ஒரு மாணவருக்கு அளிக்கலாம்” என்றார் சவுகான். இது மாணவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கிறது.

அடுத்து..  நர்மதை நதிக்கரையோரம் 108 நாள் பாதயாத்திரை சென்றார். வழியில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை நர்மதை ஆற்றில் விடும் தொழிற்சாலைகளை கண்டறிந்தார். அந்த தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை செய்ததோடு விடவில்லை..  அந்த தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு பணியை முழுமையாக செய்யும் ஏற்பாட்டுக்கான விசயங்களை செய்துவிடுகிறார்.

ஒரே நாளில் ஒரு கோடி மரம் நடவைத்து சாதனை படைத்தார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கே: நீங்கள் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு உடையவர். அது அரசியலுக்கு சாதகமா, பாதகமா?

ப: நான் அரசியலில்தான் இருக்கிறேன். ஆகவே  அரசியலுக்கு இலக்கியம் சாதகமா, பாதகமா என்றுதான் கேட்டிருக்க வேண்டும். (சிரிக்கிறார்)

சிறு வயதில் இருந்தே  இலக்கியம் மீதிருக்கும் ஆர்வத்தில், இலக்கிய கூட்டங்களுக்குச் சென்று பேச்சுக்களைக் கேட்பேன்.   ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு வந்தபிறகு….  அது ஒருமுகப்படுத்தப்பட்ட தவ வாழ்க்கை… இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வது அரிதாகிவிட்டது.

பா.ஜ.க.வுக்கு வந்தபிறகு மாலை நேரங்களில் அரசியல் கூட்டம் இல்லாத போது இலக்கிய கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.  அதில் இலக்கிய நண்பர்கள் பலர் கிடைத்தனர். சில இலக்கிய பணிகளையும் இணைந்து செய்து வருகிறோம்.

ஆனாலும் என் அடிப்படை பணி என்பது தேசத்துக்கானது… அவதும் அரசியல் களத்தில் பணி செய்ய நியமிக்கப் பணிக்கப்பட்டிருக்கிறேன். அதுதான் பிரதானம்.

ஆகவேதான் சொன்னேன்… என் அரசியல் பணிக்கு இலக்கிய பணி இடையூறாக இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக  இருக்க வேண்டும்.

மாறாக.. அரசியல் பணிக்கு இலக்கியம் மிக உறுதுணையாக இருக்கிறது. பல நேரங்களில் அரசியல் ரீதியான கருத்துக்களை சுவைபட எடுத்துச் சொல்வதற்கு இலக்கியம் உதவுகிறது.

கே: ராஜ்யசபையில் நீங்கள் பேசிய முக்கிய பேச்சுக்கள் எவை?

ப: தாஜ்மகாலைப் பற்றி இப்போது எல்லோரும் பேசிக்காண்டிருக்கிறார்கள். தாஜ்மகாலை சுற்றி இருக்கும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையினால், அது பாதித்துவிடக்கூடாது என்பதால் அவற்றை மட்டுப்படுத்தும் ஏற்பாடு தொழிற்சாலைகளில் இருக்கின்றது. ஆனால் அவற்றை பல தொழிற்சாலைகள் முறையாக பயன்படுத்த வில்லை. அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… தாஜ்மகாலை பாதுகாக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பேசினேன்.

அதே போல…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தது அல்லவா. அந்த நேரத்தில் நடந்த உபரி விளைவு.. நல்ல விளைவு ஒன்று உண்டு. அதாவது நாட்டு மாடுக்களைப் பற்றி பலரும் பேச ஆரம்பித்தார்கள். தி.மு.க.வைச் சேர்ந்த நண்பர் திருச்சி சிவா இது குறித்து ராஜ்யசபாவில் பேசினார்.  குறிப்பாக காங்கேயம் காளைகள்  பாது காக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

இது குறித்த விவாதத்தில் நான் பேசும்போது, “இது  பிஜேபி உறுப்பினர் கொண்டுவர வேண்டிய விசயம். ஆனால் தி.மு.க.வைச் சேர்ந்த என் நண்பர் கொண்டு வந்திருக்கிறார்” என்றேன். தொடர்ந்து, “காளைகளை பாதுகாப்பது அவசிம். காளைகள் இருக்க வேண்டும் என்றால், பசு இருக்க வேண்டும்” என்று பேசினேன்.

அதே போல தேர்தல் சீர்திருத்தம் குறித்து சிவா பேசினார். அப்போது அவர், “ஆசிரியர்களுக்குப் பதிலாக 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை பயன்படுத்த வேண்டும்” என்றார். இது குறித்து நான் பேசும்போது, “ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்ற நல்ல நோக்கு புரிகிறது. ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்பது சரியல்ல. ஏனென்றால் அந்த இளைஞர்கள் எந்த மனநிலை, கருத்து கொள்கை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. மாநில அரசாங்க பணியாளர்கள் தேர்தல் பணி செய்யு்போதே, அடுத்து யார் வருவர் என்று யூகித்து அதற்கு ஏற்றவாறு நெளிவு சுழிவோடு நடந்துகொள்கிறார்கள். இதில், 18 வயதான எவரை வேண்டு மானாலும் வைத்து தேர்தல் பணி செய்யலாம் என்பது இன்னும் ஆபத்தான சூழலையே ஏற்படுத்தும்.

ஆகவே தேர்தல் பணிகளில் மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும்” என்றேன்.

இதற்கு திருச்சி சிவா கைதட்டினார். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த விஜிலா என்பவர் எழுந்து ஆட்சேபமாக ஏதோ தெரிவிக்க முயன்றார். நான், “எனக்கு பேச இருக்கும் நேரமே குறைவு. நான் பேசிய பிறகு பேசுங்கள்” என்று கூறிவிட்டு தொடர்ந்து பேசி முடித்தேன்.

அப்போது விஜிலாவை நோக்கி அவைத்தலைவர், “ஏம்மா பொதுவாத்தான் கணேசன் பேசினார். எல்லா கட்சிக்காரர்களும் அமைதியா கேட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க மட்டும் உங்களை எக்ஸ்போஸ் பண்ணிக்கிறீங்க” என்று கேட்க அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

விவசாயிகளைப் பற்றிய விவாதத்திலும் கலந்துகொண்டேன்.  இரண்டு நாள் நடந்தது. “இந்த இரண்டு நாளும் டி.எம்.கே. பற்றித்தான் பேச்சு” என்றேன். பலரும், “என்ன இப்படிச் சொல்லிட்டீங்க” என்றனர். நான், “ஆம் தலித் முஸ்லிம் கிஸான்.. இது பற்றித்தானே பேசினோம்” என்றேன். அனைவரும் ரசித்துச் சிரித்தார்கள்.

விவசாயிகள் தற்கொலை பற்றி நான் பேசும்போது, “விவசாயிகளின்   கடனை ரத்து செய்தபோதும், மகாராஷ்டிரா வில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 1642 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  வங்கிக் கடன் ரத்து என்பது விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்காது. ஏனென்றால் வங்கியில் வட்டி குறைவு.. தவிர பணத்தைத் திரும்பக்கேட்டு யாரும் விவசாயிகளை சித்திரவதை செய்வதில்லை.

கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் விவசாயிகள்தான் அதைக் கட்டமுடியாமல் தவிக்கிறார்கள். தவிர கந்துவட்டிக்காரர்கள், விவசாயி வீட்டு முன் வந்து கத்துகிறார்கள். ஆகவே விவசாயிகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஆக.. விவசாயிகளின் மரணத்தைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது வங்கிக்கடன் ரத்து அல்ல… விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதுதான். ஆகவே 2020ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.  அப்போதும் பாஜகதான் ஆட்சியில் இருக்கும். நிச்சயம் அது நடக்கும் என்று பேசினேன்.

ஒரு விவாதத்தின் போது, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர், கழுவா, துளு ஆகிய மொழிகளை மத்திய அரசின் எட்டாவது பட்டியலில் (அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்) சேர்க்க வேண்டும் என்றார்.

அதற்கு நான்… “முன்பு இந்த பட்டியலில் 18 மொழிகள் இருந்தன. பிறகு 21 ஆகியிருக்கிறது. தவிர இந்த இரு மொழிகளும் ஏற்கெனவே பரிசீலனை பட்டியலில் இருக்கின்றன.

அடுத்து இரண்டு மொழியையும் தேசிய அளவில் அங்கீகரி்ப்பதற்கு முன் உங்கள் மாநிலத்தில் அங்கீகரித்திருக்கி றார்களா.. ஏன் இதில் சேர்க்கவேண்டும் என்கிறீர்கள்.. எட்டாவது பட்டியலில் சேர்த்தால் என்ன பயன்…” என்றெல்லாம் வேண்டுமென்றே கேட்டேன்.

பிறகு,“இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் எங்கள் தமிழ் மொழியும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டி ருக்கிறது.   இப்போது தமிழைச் சேர்த்திருப்பதால் தமிழைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமா இல்லையா…  அந்த எட்டாவது  பட்டியிலில் உள்ள மொழிகளைப் பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஏனென்றால் தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழைப் பாதுகாக்கும் முயற்சி இல்லை.

கர்நாடகத்தில் இந்தி கொண்டுவந்தார்கள்.. கர்நாடகம் எதிர்க்கவில்லை. ஆனால் இன்று வரை கன்னட மொழிக்கு பாதிப்பு இல்லை.  அதே போல மலையாளம், தெலுங்குக்கும் பாதிப்பில்லை.

தமிழகத்தில் அப்போது சில கட்சிகள் எதிர்த்தார்கள். அது அவர்களது கட்சி கொள்கை அதை நான் விமர்சிக்கலை. ஆனால் தமிழ் மொழி இங்கே பாதிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் என் கோரிக்கை என்னவென்றால் ஒரு மொழியின் எதிர்ப்பு  என்பது இன்னொரு மொழிக்கு ஆதரவு என்று ஆகாது. தயவு செய்து மத்திய அரசே தமிழக அரசே தமிழைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து..

கலாச்சார ரீதியாக நாம் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில தனித்தன்மைகள், அடையாளங்கள்  இருக்கின்றது. தமிழககத்தைப் பொறுத்தவரை நாங்கள் லேங்வேஜ் சென்சிடிவ்ஸ். பிரமதமரைப் பார்த்து.. இதை நீங்களே பார்த்திருப்பீர் கள்.. வணக்கம் என்று ஒரு வார்த்தை சொன்னால் ஐந்து நிமிசம் கை தட்டுவார்கள். அதே நேரம்  கூடுதலாக இரண்டு தமிழ் வார்த்தை பேசிட்டில் இன்னும் கைதட்டு வான். அதேநேரம் தமிழுக்கு விரோதமாக யாராவது பேசுவதாக தெரிந்தால் கடுமையாக எதிர்ப்பார்கள். அவர்கள் தமிழ் கற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது வேறு விசயம்.

இன்னொரு விசயம்…

ஆங்கிலமோ  இந்தியோ தெரியவில்லை என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.  தமிழகத்தைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மூலையில் ஆங்கிலமோ இந்தியோ தெரியாத ஒரு பாமர விவசாயி தனது எண்ணங்களை தமிழில் எழுதி பிரதமருக்கு அனுப்பினால் அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பிரதமரின் கவனத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு உண்டான பதில் விவசாயிக்கு  தமிழிலேயே அனுப்பப்பட வேண்டும். இந்த ஏற்பாட்டைச் செய்தால், தேசிய ஒருமைப்பாட்டினை உணர்வு பூர்வமாக உணர முடியும்.

மொழிபெயர்ப்பு ஏற்பாடு செல்பேசியிலேயே இருக்கிறது. தேவையானால் இதற்காக மொழிபெயர்ப்பாளரை நியமிக்கலாம் என்று பேசினேன்.

அப்போது அவையில் பிரதமர் மோடி இருந்தார். பிறகு அவர் பேசும்போது, “கணேசன் சொல்வது சரி. நீங்கள் எல்லோரும் தமிழகத்துக்குச் செல்ல வேண்டும். அந்த பகுதி மக்களின் கலாச்சாரத்தில் பல தனித்தன்மைகள் உள்ளன.  பல்கலைக்கழகங்கள் பரஸ்பரம் மாணவர்களை பறிமாறிக்கொள்ள வேண்டும். அதாவது பிற மாநில பல்கலை மாணவர்கள் தமிழக பல்கலைகளுக்குச் செல்ல வேண்டும்.  அங்கிருக்கும் மாணவர்கள் பிற மாநில பல்கலைக்கு வர வேண்டும். பரஸ்பரம் பிற மொழிகளை மாணவர்கள் கற்க வேண்டும்” என்றார்.

தனது கருத்தை பிறகு .நிதிஆயோக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார். பிரதமர் தமிழைப் புகழ்ந்து பேசினார் என்று தினசரிகளில் வெளியானது.

இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல கருத்துக்களை அவசியமான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய முடிகிறது.

நேரம் குறைவுதான். ஆனால் நான் எங்கள் அய்யன் வள்ளுவன் எல்லாவற்றையும் இரண்டு வரிகளில் சொல்ல முடிந்தபோது என்னால் மூன்று நிமிடங்கலில் சொல்ல முடியாதா? இதையும் பாராளுமன்ற பேச்சில் குறிப்பிட்டிருக்கிறேன்.

(மேலும் சில கேள்விகள்.. பதில்கள்.. அடுத்த பகுதியில்..)